தமிழ் கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் கட்டப்பட்டுள்ள சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம் அனைவரும் வியக்கும் வகையில் அமைந்துள்ளது.
புதிய முனையத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடி:
1,260 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய முனையத்தை பிரதமர் மோடி வரும் சனிக்கிழமை திறந்து வைக்கிறார். தற்போது, புதிய முனையத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.
"சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம், 2,20,972 சதுர மீட்டர் பரப்பளவில், தமிழ்நாடு மாநிலத்தில் வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு உயர்தர உள்கட்டமைப்புகளை வழங்குவதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பாகவும் இது உள்ளது" என புதிய முனையம் குறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விமான நிலைய பயணிகளின் அளவை வருடத்திற்கு 23 மில்லியனில் இருந்து 30 மில்லியனாக T-2 (Phase-1) முனைய கட்டிடம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் உள்கட்டமைப்புக்கு கூடுதல் பலம்:
சென்னை விமான நிலைய புதிய முனையத்தின் புகைப்படங்களை பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். "சென்னையின் உள்கட்டமைப்புக்கு இது ஒரு முக்கியமான கூடுதல் பலமாக இருக்கும். இது இணைப்பை அதிகரிக்கும். உள்ளூர் பொருளாதாரத்திற்கும் பயனளிக்கும்" என மோடி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் நான்கு முக்கிய நகரங்களில் ஒன்றாக இருப்பது சென்னை. ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்தே சென்னை நகரம் பொருளாதார ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக உள்ளது. சென்னையில் இருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு விமான சேவை இயக்கப்படுகிறது.
அந்த வகையில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் நாட்டின் முக்கிய வெளிநாட்டு விமான நிலையங்களில் ஒன்றாக உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்தும் வரும் பயணிகள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, தற்போது சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது.
இந்த புதிய முனையம் சென்னையின் உள்கட்டமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. உள்ளூர் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல இந்த புதிய முனையம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் அதிகரித்து வரும் தேவையை கருத்தி கொண்டு பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான, விரிவான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கை தயார் செய்ய விரைவில் ஆலோசகர் நிறுவனம் நியமிக்கப்படும் என்று தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: