செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாய்களை கட்டுப்படுத்துவதற்காக, நாய்கள் பிடிக்கப்பட்டு ஆய்வகத்தில் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் அந்த நாய்கள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு திருப்பி விடப்படும். இவ்வாறு செய்யும் பட்சத்தில் செங்கல்பட்டு நகராட்சி பகுதிகளில், நாய்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வைத்திருக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில்  செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட விலங்கு கருத்தடை சிகிச்சை கூடத்தில் நாய்கள் உயிர் இறப்பு ஏற்பட்டது.



 

 

வைரல் வீடியோ

 

 இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவத் துவங்கியது. அந்த வீடியோவில் சுமார் 5 நாய்கள் பரிதாபமாக உயிரிழந்திருக்கும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த காட்சிகள் பார்ப்போர் நெஞ்சை பதறும் வகையில் இருந்தது. இதனை தொடர்ந்து, இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு கவனத்திற்கு வந்தது. சமூக வலைதளத்தில் பரவிய வீடியோவில் காஞ்சிபுரம் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் ஆய்வு மேற்கொண்டு, முதல்கட்ட விசாரனை அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அவர் நடத்திய விசாரணை அறிக்கையில், Animal Trust of India (NGO) எனும் தன்னார்வ நிறுவனம் இந்திய கோ விலங்கு நலவாரியத்தில் பதிவு செய்யாமல் இயங்கிவந்துள்ளது

 

வழக்கு பதிவு

 

செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட விலங்கு கருத்தடை சிகிச்சை கூடத்தில், தன்னார்வ நிறுவனம் நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள, தேவையான அடிப்படை வசதிகள் ஏதும் செய்யாமலும், விதிமுறைகளுக்கு முரணாகவும் இயங்கி வந்துள்ளது என விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் நாகராஜ் அளித்த புகாரின் பேரில், விலங்குள் கொடுமை தடுப்புச் சட்டம்  ,1960 பிரிவு 11 (a) ன்படி மற்றும் இந்திய தண்டனை சட்டம் 1860 பிரிவு 428 & 429 ன்படி செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் ,  தன்னார்வ நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.



 

இதுதொடர்பாக தன்னார்வ நிறுவனத்தின் பணிகளை செங்கல்பட்டு நகராட்சி நகர் நல அலுவலர் முத்து மேற்பார்வை செய்ய தவறியதால் அவர் மீதும், மற்றும் செங்கல்பட்டு நகராட்சி துய்மை ஆய்வாளர் பால் டேவிஸ் ஆய்வுபணி மேற்கொள்ளாததால், அவர் மீதும் விளக்கம் கேட்டு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  இந்தசம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் ஜெயந்தி விசாரணை அலுவலராக நியமனம் செய்யப்பட்டு விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
  

 

உடற்கூறாய்வு

 

இந்நிலையில் நாய்களின் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பதை கண்டறிய காவல்துறையினரின் நடவடிக்கையின் பெயரில் , ஏழு பேர் கொண்ட கால்நடை மருத்துவக் குழுவினர் உயிரிழந்து புதைக்கப்பட்ட ஐந்து நாய்களை தோண்டி எடுத்து  உடற்கூறாய்வு  மேற்கொண்டனர். இந்தக் குழுவில் நான்கு மருத்துவர்கள் உட்பட மேற்பார்வையாளர்கள் பங்கு பெற்றிருந்தனர். இதுபோக காஞ்சிபுரம்  கால்நடை  புலனாய்வு துறை சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீடியோ சமூக வலைதளத்தில் பரவி சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், உடற்கூறு ஆய்வு நடைபெற்ற போது ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, சென்னையைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் புருஷோத் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.