வரிசையில் நிற்க வைத்து அழகாக மாணவ மாணவிகளை ஏற்றிச் செல்லும் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள்
பேருந்தில் அவல நிலை
செங்கல்பட்டு ( Chengalpattu News ): அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு, தமிழக அரசு சார்பில் பேருந்தில், பயணிக்க 'பஸ் பாஸ்' ( இலவச பேருந்து பயண அடையாள சீட்டு ) வழங்கப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி, இலட்சக்கணக்கான மாணவ மாணவிகள் தினமும் பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர். இருந்தும் அரசு பேருந்துகளில், மாணவர்கள் தொங்கி கொண்டு செல்லும் அவல நிலை தொடர்ந்து வருகிறது. இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி தொடர்ந்து பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
முறையான கண்காணிப்பு இல்லை
குறிப்பாக அரசு பேருந்துகளில் பயணிக்கும் மாணவ மாணவிகளை ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் முறையாக கண்காணிப்பது கிடையாது என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் அவற்றை பொய்யாக்கும் வகையில், மதுராந்தகம் போக்குவரத்து பணிமணியை சார்ந்த பேருந்து இயக்கம் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள், மாணவ மாணவிகளை வரிசையாக பேருந்தில் ஏற்றிச்செல்லும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புரிந்து நடந்து கொண்ட ஊழியர்கள்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், அடுத்து உள்ள பகுதி மொறப்பாக்கம். இங்கு அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த அரசுப் பள்ளியில் 15nக்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த, மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். மொறப்பாக்கம் அருகே உள்ள தண்டரைபேட்டை, தண்டரைபுதுச்சேரி உள்ளிட்ட கிராமத்தில் இருந்தும் அதிக அளவு மாணவ மாணவிகள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். மதுராந்தகம் பகுதியில் இருந்து பாப்பாநல்லூர் செல்வதற்கு மாலை வேளையில், ஒரே அரசு பேருந்து மட்டுமே உள்ளது. இதை விட்டால் அந்த ஊருக்கு செல்ல வேறு பேருந்து இல்லை. அதேபோன்று அந்த வழியில் உள்ள கோழியாளம் மற்றும் தண்டரை உள்ளிட்ட பகுதிகளுக்கும் பேருந்து போக்குவரத்து வசதிகள் கிடையாது.
எனவே மதுராந்தகம் முதல் பாப்பாநல்லூர் வரை செல்லக்கூடிய டி 16 என்ற பேருந்து மாலை 4.45 மணிக்கு, கிளம்பும். இப்ப பேருந்து மாணவ மாணவிகள் தவறவிட்டால் வேறு வழி இல்லாமல் நடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனை கருத்தில் கொண்ட, பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள், அனைத்து மாணவ மாணவிகளிலும் வரிசையில் நிற்க வைத்து பேருந்தில் ஏற்றிய பிறகு, பேருந்தை எடுத்துச் செல்கின்றனர். மாணவ மாணவிகளை அலட்சியமாக பார்க்கும் சில அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மத்தியில், கண்ணும் கருத்துமாக மாணவ மாணவிகளை பார்த்துக் கொள்ளும் வீடியோ தற்பொழுது வைரலாக பரவி வருகிறது. இதேபோன்று அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களும் செயல்பட வேண்டும் என்பதே, பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.