செங்கல்பட்டு மாவட்டம், லத்தூர் ஒன்றியத்தில் உள்ள நெல்வாய் ஊராட்சி, இருந்து வருகிறது. இந்த ஊராட்சியில்,  நெல்வாய், பேக்கரணை  மற்றும் சாத்தமங்கலம் ஆகிய 3 கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சிக்கு கிராம நிர்வாக அலுவலராக சசிகுமார் பணிபுரிந்து வருகிறார்.  பள்ளி மற்றும் கல்லூரி படிக்கக்கூடிய மாணவ , மாணவிகளுக்கு ஜாதி சான்றிதழ் வருமான சான்றிதழ் மற்றும் இருப்பிட சான்றிதழ் வழங்குவதற்கு, ஒரு சான்றிதழ் 200 வீதம் லஞ்சம் கேட்டு வாங்குவதாகவும், முதல் பட்டதாரி சான்றிதழ் வாங்குவதற்கு, 1000 ரூபாய் லஞ்சம் கேட்பதாகவும், மேலும் சமுதாய ரீதியாக அப்பகுதி மக்களை, இழிவு செய்வதாகவும்  அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.


 

இந்நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரகம் வந்த கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர், செங்கல்பட்டு மாவட்ட  ஆட்சியர் ராகுல் நாத்திடம் புகார் மனுவை அளித்தனர். பொதுமக்கள் அளித்துள்ள புகார் மனுவில், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அரசு வழங்கும் ஓய்வூதிய திட்டத்திற்கு விண்ணப்பிக்கும், நபர்களிடம் 2000 வரை லஞ்சம் கேட்பதாகவும், திருமண உதவித்தொகை பெற விண்ணப்பித்தால் 3000 லஞ்சம் கேட்பதாகவும், குறிப்பாக விவசாயிகள் பயிர் கடன் பெற அடங்கல் உள்ளிட்ட சான்றிதழ் வழங்கும்போது ஏக்கருக்கு 5000 வரை லஞ்சம் கேட்பதாக புகார் அளித்துள்ளனர். இதே போல பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு பத்தாயிரம் வரை லஞ்சம் கேட்பதாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.



 

மேலும் இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜிடம், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக , கிராம நிர்வாக அலுவலரிடம் பேசும் வீடியோ ஆதாரத்தையும் அப்பகுதி மக்கள் அளித்துள்ளனர். வீடியோவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கிராம மக்களுக்கு உத்தரவாதம் அளித்தார்.