மாற்றுத் திறனாளியிடம் கடுமையான மனித உரிமை மீறலில் ஈடுபட்டு, கொலை வெறித்தாக்குதல் நடத்திய கூவத்துர் காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பாரதி அண்ணா விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது


உயரம் குறைந்த ஊனத்தை குறிப்பிட்டு 


செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் , செய்யூர் வட்டம் கூவத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கு.நாகராஜ் ( வயது 32 ). தந்தை பெயர் குப்பன். இவர் உயரம் வளர்ச்சி குன்றிய  மாற்றுத்திறனாளி ஆவார். இவருடன் உயர வளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளி மனைவி உமா அவர்களும் வசித்து வருகிறார். கடந்த 12.05.2023 அன்று நடந்த சம்பவத்திற்கு சில தினங்களுக்கு முன்பு இவரது சொந்தப் பிரச்சனையில் இவர் தாய்மாமன் மீது இவர் கொடுத்த புகாரை விசாரிக்காமல் , இவரையே காவல் நிலையத்தில் உட்கார வைத்து கேவலமாக பேசியதோடு, இவரை தாக்கி அனுப்பியுள்ளனர். இதில் இவர் உடல்வலி மற்றும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டார். சம்பவம் நடந்த 12.05.2023 அன்று கூவத்தூர் காவல் நிலையம் வழியாக சென்ற இவரை உயரம் குறைந்த ஊனத்தை குறிப்பிட்டு கேவலப்படுத்தும் நோக்கத்தோடு, காவலர் ராஜசேகர் அழைத்தார். இவர் காவல் நிலையத்திற்குள் வந்தவுடன் , வீடியோவை ஆன் செய்து வைத்துக் கொண்டு, இவரது ஊனத்தை மீண்டும் கூறி கேவலப்படுத்தி கோபமூட்டியுள்ளனர். தன்னை மானபங்கப்படுத்தி  அவமதிக்கும்போது தன்மான உணர்விலிருந்து நாகராஜ் எதிர்த்துப் பேசியதை பொருத்துக் கொள்ள முடியாத ராசேகர் உள்ளிட்ட 3 காவலர்கள் பூட்ஸ் காலால் மிதித்து தொடை எலும்பை உடைத்துள்ளனர் . இந்த சம்பவம் காவல் ஆய்வாளர் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. காவல்துறையின் இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது .


கொலை முயற்சி வழக்கு


மாற்றுத்திறனாளி கு.நாகராஜ் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தி இடது தொடை எலுப்பை முறித்த ராஜசேகர் உள்ளிட்ட 3 காவலர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருந்த காவல் அதிகாரிகள் மீதும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திட வேண்டும். மாற்றுத் திறனாளி கு.நாகராஜை கோபமூட்டி மானபங்கப்படுத்தும் நிகழ்வை காவல் நிலையத்தில் ஒலிப்பதிவு செய்ததோடு , அதில் ஒருபகுதியை மட்டும் எடிட் செய்து சமூக வளைதளத்திலும், ஊடகத்திலும் பரப்பி உடல் ரீதியாக பெரும் பாதிப்புக்குள்ளான நபருக்கு மனரீதியாகவும் கொடுமைக்கு உள்ளாக்கியதற்கு காரணமான காவலர்கள் மீது மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்திட வேண்டும். சட்டவிரோத மனித உரிமை மீறவில் ஈடுபட்ட காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல் நிர்வாக ரீதியாக பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுகிறோம். தொடை எலும்பு முறிவால் நடமாட முடியாமல் பாதிப்புக்குள்ளான மாற்றுத் திறனாளி கு.நாகராஜுக்கு ரூ .20 லட்சம் வழங்கிட வேண்டும். அதோடு, அவரது உயர வளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளி மனைவி உமா - விற்கு அரசுப் பணியும் வழங்கி உதவிட கேட்டுக் கொள்கிறோம் .


மாற்றுத் திறனாளி உரிமை


மாற்றுத் திறனாளிகளை காவல் நிலையத்திற்கு வருகிறபோது தடையற்ற சூழலும், சைகை மொழி பெயர்ப்புக்கான ஏற்பாடும், மதிப்புக்கேடு ஏற்படுத்தாத சமத்துவ உரிமையை நிலைநிறுத்தும் சூழலை உருவாக்க வேண்டியது அவசியம் என்று மாற்றுத் திறனாளி உரிமைச் சட்டம் 2016 வலியுறுத்துகிறது. மேலும், குற்றவிசாரணைக்கு மாற்றுத் திறனாளிகளை காவல் நிலையத்திற்கு வரவழைக்கக் கூடாது, அவர்களை அவர்களின் இல்லத்திற்கே சென்று விசாரிக்க வேண்டுமென்று, குற்றவியல் நடைமுறை திருத்தச் சட்டம் 2013 , பிரிவு 160 வலியுறுத்துகிறது. இத்தகைய மாற்றுத் திறனாளி உரிமைகளை தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில், நடைமுறையாக்கும் வகையில் சிறப்பு வழிகாட்டு உத்தரவை வெளியிட்டு, அதுகுறித்த சட்டப் பயிற்சியை அனைத்துமட்ட காவல் அதிகாரிகளுக்கும் வழங்கிடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டக்குழு சார்பாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.