வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் பால் பண்ணையில் இருந்து சுமார் 600 முகவர்களுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 90 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்யும் பணியிலும், ஒப்பந்த அடிப்படையில் தற்போது சுமார் 17 வாகனங்கள் இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஆவின் பொது மேலாளர் சுந்தர வடிவேலு திடீர் சோதனை மேற்கொண்ட போது TN 23 AC 1353 என்ற ஒரே பதிவு எண்ணில் இரண்டு வாகனங்கள் ஆவின் பால் பண்ணையில் இருந்தது கண்டறியப்பட்டது.


இதனை அடுத்து இரண்டு வாகனத்தையும் பறிமுதல் செய்து பண்ணை வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். இதற்கு இடையில் நேற்று முன் தினம் இரவு வாகன உரிமையாளர்கள் இரவு காவலாளியை விரட்டியும் கொலை மிரட்டல் விடுத்தும் அந்த புகாருக்கு உள்ளான போலியான பதிவில் கொண்ட வாகனத்தை எடுத்துச் சென்றதாக ஆவின் தரப்பில் வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் சத்துவாச்சாரி காவல்துறையினர் ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வாகன ஒப்பந்த உரிமையாளர் சிவக்குமார் மற்றும் விக்கி ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். மேலும் காணாமல் போன வாகனத்தையும் தேடி வருகின்றனர்.


 




 


இந்நிலையில், ஆவினில் உள்ள தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் ஒப்பந்தம் எடுத்து நடத்தி வரும் சாய்ராம், செக்யூரிட்டி சர்வீஸ் உரிமையாளர் கோபாலுக்கு தங்களது ஒப்பந்தத்தை ஏன் நாங்கள் ரத்து செய்யக்கூடாது என குறிப்பிட்டு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது 25 பேர் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஒரே பதிவு எண் கொண்ட இரண்டு வாகனங்கள் இயக்கியதை கண்காணிக்க தவறியது ஏன்? பறிமுதல் செய்து வைத்த போலியான பதிவு எண் கொண்ட, பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை ஆவின் வளாகத்தில் இருந்து வெளியே எடுத்து செல்ல அனுமதித்தது யார்? பணியில் அலட்சியமாக இருந்ததன் காரணமாகவும், பணியில் குறைபாடு இருந்ததாலும் தங்களது ஒப்பந்தத்தை ஏன் நாங்கள் ரத்து செய்யக்கூடாது? உங்களை ஏன் பிளாக் லிஸ்டில் போடக்கூடாது? என்ற கேள்விகளுடன் தனியார் செக்யூரிட்டி சர்வீஸுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக 12ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.


 




 


அதேபோல வழக்கு பதிவுக்கு உள்ளான சிவக்குமார் தரப்பில் அணைக்கட்டு வழித்தடத்தில் இயங்கி வந்த வாகனத்தையும், புகாருக்குள்ளான குடியாத்தம் வழித்தடத்தில் இயங்கும் தினேஷ் என்பவருக்கு சொந்தமான வாகனம் என இரண்டு வாகன ஒப்பந்தத்தையும் ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வழித்தடத்தில் உள்ள பால் முகவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் ஆவின் தரப்பில் உள்ள அரசு வாகனத்திலேயே பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து ஆவின் அதிகாரிகளிடம் கேட்டபோது தாங்கள் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் ஆவினில் பால் திருட்டு எதுவும் நடைபெறவில்லை என்பது தெரிய வந்துள்ளது .அதேபோல ஒரே பதிவு எண்ணில் இரண்டு வாகனங்கள் இயக்கதற்கான காரணம் குறித்தும் தொடர் விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.