சிறார் கூர்நோக்கு இல்லம் ( chengalpattu juvenile home )

 

செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், சிறார் கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. சென்னையை ஒட்டி அமைந்துள்ள  சிறார் கூர்நோக்கு இல்லம் என்பதால், சிறுவயதிலேயே குற்றம் செய்யும் சிறுவர்கள், பலரும் நீதிமன்ற உத்தரவுன்படி இந்த சிறார் கூர்நோக்கு பள்ளியில், அடைத்து அவர்களுக்கு நன்னெறிகள் மற்றும் கல்வி உள்ளிட்டவற்றை போதித்து வருகின்றனர். சிறுவயதிலேயே சூழ்நிலை காரணமாக குற்றம் செய்யும் சிறுவர்கள், சிறார் கூர்நோக்கு இல்லத்திலிருந்து வெளியேறும் பொழுது, சமூகம் மதிக்கும் நபராக வெளியே அனுப்ப வேண்டும் என்பதே இந்த இல்லத்தின் நோக்கமாக இருந்து வருகிறது.



 

அடித்து கொலை

 

இந்த நிலையில் செங்கல்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லமானது, கடந்த சில மாதங்களாகவே சர்ச்சையில் சிக்கி வருகிறது. குறிப்பாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி தாம்பரம் பகுதியை சேர்ந்த, கோகுல் ஸ்ரீ என்ற சிறுவன் செங்கல்பட்டு இல்லத்தில் பணியாற்றி வரும் காவலர்களால், அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 6 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில், அடுத்த மாதமே செங்கல்பட்டு சிறார் கூர்நோக்கு பள்ளியிலிருந்து, 2 சிறுவர்கள் தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.



 

சிறுவர்கள் இடையே மோதல் 

 

இந்த நிலையில் கடந்த வாரம் சிறார் கூர்நோக்கு இல்லத்தில், உள்ள சிறுவர்களுக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதில் காயம் அடைந்த சிறுவர்கள் மூன்று பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கிருந்து தொடர்வண்டி மூலம் தப்பி சென்றுள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 

 

காவலர்களுக்கும், சிறுவர்களுக்கும் மோதல்

 

இந்த நிலையில், சிறார் கூர்நோக்கு இல்லத்தில் உள்ள காவலர்களுக்கும், சிறுவர்களுக்கும் மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சிறுவர்கள் மோசமாக நடந்து கொள்வதாக காவலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனார். இதுகுறித்து பணியில் ஈடுபடும் ஊழியர்கள் சிலர் கூறுகையில், " பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கும் சிறுவர்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுவதாகவும், சில சமயம் அவர்கள் எல்லை மீறி நடந்து கொள்வதாகவும் , சிறுநீரை பிடித்து மேலே ஊற்றுவதாகவும் அதிர்ச்சி தகவலை கூறியிருந்தனர்.

 

தற்கொலை முயற்சி 

 

இந்தநிலையில், நேற்று மாலை ஐந்து முப்பது மணி அளவில் செங்கல்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்தில், திருவாரூர் மாவட்ட சேர்க்கை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன், வாயில் நுரை தள்ளியபடி இருந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட சக சிறுவர்கள் இதுகுறித்து காவலர்களிடம் தகவல், தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர் சீர்நோக்கு இல்லத்தில் சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறு அனுமதிக்கப்பட்டான்.



இதனையோடுத்து சிறுவனிடம் நடத்திய விசாரணையில் கழிவறையில் இருந்த  பென்னாயிலை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக தெரிவித்துள்ளார். சிறுவனுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செங்கல்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடுத்தடுத்து சர்ச்சைகள் தொடர்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து முறையாக சமூக நலத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது