சென்னை:
சென்னையில் இருந்து விமானத்தில் சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.3.37 கோடி மதிப்புடைய அமெரிக்க டாலர், சவுதி அரேபியா  ரியால் கரன்சி ஆகிய வெளிநாட்டு பணம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர்.

 

சென்னை சுங்கத்துறை
  


 

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, நேற்று முன்தினம் புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் உடைமைகளை, சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி கொண்டு இருந்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி மீது, பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து, அந்தப் பயணியை பாதுகாப்பு அதிகாரிகள் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

 

உள்ளாடைகளுக்குள் கட்டுக்கட்டாக..

 

சுங்க அதிகாரிகள் அந்தப் பயணியை விசாரித்தபோது, அவர் சுற்றுலா பயணிகள் விசாவில் சிங்கப்பூருக்கு சுற்றுலா பயணியாக செல்வதற்காக வந்திருந்தார் என்று தெரியவந்தது. ஆனால் விசாரணையில், அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதை அடுத்து அந்தப் பயணியின் பயணத்தை சுங்க அதிகாரிகள் ரத்து செய்தனர். அதோடு அந்தப் பயணியை தனி அறைக்கு அழைத்து சென்று பரிசோதித்தபோது, அந்தப் பயணியின் உள்ளாடைகளுக்குள் கட்டுக்கட்டாக, அமெரிக்க டாலர் கரன்சிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அவைகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன்பின்பு அந்தப் பயணியின் சூட்கேஸை திறந்து பார்த்து சோதித்தனர். சூட்கேசுக்குள் 9 ரகசிய அறைகள் இருந்தன. அவைகளை உடைத்துப் பார்த்தபோது, அவற்றுக்குள்ளும் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் கரன்சி மற்றும் சவுதி அரேபியா ரியால் கரன்சி பெருமளவு இருந்தன. அவற்றையும் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 

ஹவாலா பணம் ( hawala money )

 

அவரிடம் இருந்து மொத்தம் ரூ. 3.37 கோடி மதிப்புடைய அமெரிக்க டாலர் மற்றும் சவுதி அரேபியா ரியால்  ஆகிய வெளிநாட்டு பணத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதோடு அந்தப் பயணியை கைது செய்து, மேலும் விசாரணை நடத்துகின்றனர். சுங்க அதிகாரிகளின் விசாரணையில், இந்தப் பயணி வேறு யாரோ கொடுத்து விட்ட பணத்தை கூலிக்காக எடுத்து செல்கிறார் என்று தெரிய வந்தது. எனவே இது கணக்கில் இல்லாத ஹவாலா பணம் என்றும், வேறு ஒருவர் ஹவாலா பணத்தை, இவரிடம் கொடுத்து சிங்கப்பூருக்கு கடத்துகிறார் என்றும் தெரிய வந்தது. எனவே இவரிடம் இந்த ஹவாலா பணத்தை கொடுத்து விட்ட மர்ம ஆசாமி யார்? என்று சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் மூன்று கோடிக்கும் அதிகமான ஹவாலா பணம் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.