செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் பருவமழையின் போது ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையிலும், இழப்புகளை தவிர்க்கும் நோக்கத்திலும், நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொள்ள தயார்படுத்திக்கொள்ளும் வகையிலும் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து வருவாய் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் தலைமையில் நடைபெற்றது.


 


இக்கூட்டத்தின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:


செங்கல்பட்டு மாவட்டத்தில்  வருவாய் கோட்ட அலுவலர் ஆகியோர் Vulnerable Area பகுதிகளுக்கான கிராம/வார்டு அளவிலான வரைபடங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கிராம அளவிலான முதல் பொறுப்பாளர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். தற்காலிக நிவாரண முகாம்கள், முழுமையாக தணிக்கை செய்து தயார் நிலையில் உள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும். புதியதாக Vulnerable Area ஏதும் கண்டறியப்பட்டால் அவற்றின் விவரங்களை உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். முதல் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து குழுக்களிலும் பெண்கள் / தன்னார்வலர்கள் உள்ளனரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.


முறையான முன்னெச்சரிக்கை அறிவிப்பு


அவசரகால சூழ்நிலைகளில் பங்கெடுத்து பணியாற்றும் வகையில், தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், தகவல் தொடர்பு நிறுவனங்கள், ஆயில் கார்பரேஷன் நிறுவனங்கள் ஆகியோர் அடங்கிய கோட்ட அளவிலான கூட்டம் நடத்தி பேரிடர் காலத்தில் பங்காற்ற அறிவுறுத்த வேண்டும். பேரிடர் மீட்பு மற்றும் வெளியேற்றுதல் பணிகளுக்கு தேவையான சாதனங்கள் ஜேசிபி, மர அறுவை இயந்திரங்கள், வாகனங்கள், மோட்டார் படகுகள், பரிசல்கள், உயர் மின் விளக்குகள், மோட்டார் பம்பு செட்டுகள், டீசல் ஜெனரேட்டர், மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் அவை உள்ள இருப்பிடம் மற்றும் உரிமையாளர் விவரங்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒலிபெருக்கி பொருத்திய வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு முறையான முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை செய்ய வேண்டும்.


" பொது கட்டிடங்களை தணிக்கை "


தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் வட்டார அளவில் கல்வி நிறுவனங்கள், பேரிடரால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் ஒத்திகை பயிற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பேரிடர் மீட்பு சாதனங்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். காவல்துறையினர் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் திருடு மற்றும் சமூக விரோத நடவடிக்கைகள் ஏற்படாதவாறு காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வேண்டும். வட்டாட்சியர்கள் மழைமானி நிலையங்களை ஆய்வு செய்து அவை நல்ல முறையில் செயல்படுவதையும், இடிந்து விழும் நிலையில் உள்ள ஆபத்தான பொதுக் கட்டிடங்களை தணிக்கை செய்து பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும்.


உடனடியாக அகற்ற நடவடிக்கை


ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கால்வாய்கள், நீர்நிலைகள் மற்றும் Culvert  ஆகியவற்றை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழைநீர் சேகரிப்பு பகுதிகளை அதிகரிக்க வேண்டும். செயல்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட வேண்டும். மாநகராட்சி / நகராட்சி ஆணையாளர்கள் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகாதவாறு கழிவுநீர் கால்வாய்களில் சுத்தம் செய்ய அறிவுறுத்த வேண்டும். தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கும் பட்சத்தில் உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சாலையில் உள்ள குழிகளை மூட வேண்டும்.


கால்நடை நிவாரண மையங்கள் 


பள்ளி கட்டிடங்கள் உறுதியுடன் இருப்பதையும், அவசர காலங்களில் நிவாரண மையமாக செயல்பட ஏதுவாக அனைத்து அடிப்படை வசதிகள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளில் உள்ள திறந்த கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்து மூடப்பட வேண்டும். கட்டிடங்களின் மேற்பகுதிகளில் நீர் தேங்காதவாறு சுத்தப்படுத்தி வைக்க வேண்டும். மருத்துவத் துறை அலுவலர்கள் முகாமில் தங்க வைக்கும் நபர்களுக்கு தேவையான நோய் தடுப்பு மாத்திரைகள், முக கவசம், கிருமி நாசினி ஆகியவை போதிய அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்கள் வெள்ள பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கும் பகுதிகளில் முன்னதாக கால்நடை நிவாரண மையங்கள் அமைக்க வேண்டும்.



மின்சாரத் துறை 


மின்சாரத் துறை அலுவலர்கள் தாழ்வாக உள்ள மின் கம்பிகள், பழுதடைந்த மின்கம்பங்கள் உடனடியாக அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் இணைப்புகளை சரிபார்த்து மின்சாரக் கசிவு ஏற்படாதவாறும், மரக்கிளைகள் மின் இணைப்புகளில் உரசாத அளவிற்கு  சுத்தப்படுத்த வேண்டும். மேலும், அனைத்து துறை அரசு அலுவலர்கள் மழை, வெள்ளம், புயல், இடி மின்னல் போன்ற பேரிடர் காலங்களில் தென்மேற்கு பருவமழையின் போது நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொள்ள தயார்படுத்திக்கொள்ளும் வகையிலும் இழப்புகளை தவிர்க்கும் நோக்கத்திலும் பேரிடர் மேலாண்மைக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் முழுமையான அளவில் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.


இக்கூட்டத்தில், செங்கல்பட்டு சார் ஆட்சியர் லட்சுமிபதி  மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அறிவுடைநம்பி, மகளிர் திட்ட இயக்குனர் மணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.