சென்னையில் வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடு வரம்பில் இன்னும் முடிவெடுக்கவில்லை என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.


சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு எந்தவொரு விபத்தும், ஏற்படாமல் இருப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் போக்குவரத்து விதிமுறைகள் கட்டமைக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. 


 சென்னையில் 40 கி.மீ. வேக கட்டுப்பாடு என்ற அறிவிப்பு பற்றி விமர்சனம் எழுந்த நிலையில், போக்குவரத்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.


புதிய விதிமுறைகள் குறித்து ஆயுவு செய்வதற்காகவே கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கு தற்போது அபராதம் விதிக்கப்படாது என்றும் காவல்துறை விளக்கமளித்துள்ளது. நாட்டின் பிற பெருநகரங்களுடன் ஒப்பிட்டு அதற்கேற்ப வேக கட்டுப்பாடு விவகாரத்தில் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வேக கட்டுப்பாடு விதி அறிவிப்பு:


கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, சென்னையில் 40 கி.மீ., மேல் வாகனத்தை இயக்கினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவித்திருந்தார். 


சென்னை பெருநகர போக்குவரத்து காவல் தற்போதுள்ள வளங்களில் முன்னேற்றத்தை நோக்கி நடவடிக்கை எடுப்பதிலும், போக்குவரத்தை சீர்செய்வதிலும் அதை அமல்படுத்துவதிலும் மற்றும் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றின் அடிப்படையில் திறமையான செயல்பாட்டிற்கான நவீன தொழில்நுட்ப முன் முயற்சிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. 


சென்னையில் 10 இடங்களில் இந்த கட்டுப்பாடு அமல்படுத்தப்படுவதாகவும், வேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிய 20 இடங்களில் கண்காணிப்பு கருவி பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியிருந்தார். இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை 50 கி.மீ. வேகத்திலும், காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 40 கி.மீ. வேகத்தில் வாகனத்தை இயக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.


புதிய விதிமுறைகள் - சர்ச்சை





வேக கட்டுப்பாடு விதிகள் அமல்படுத்துவது தொடர்பாக சமூக வலைதளங்களில் சர்ச்சை கருத்துக்கள் எழுந்தன. சென்னையில் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால், பல நேரங்களில் வாகனங்கள் மெதுவாகவே செல்கிறது, அதோடு, வாகனம் ஓட்டும்போது 40 கி.மீ. வேகத்திற்கு கீழ் கட்டுப்படுத்துவது எளிதானதில்லை போன்ற கருத்துகள் எழுந்தன. பல்வேறும், இந்த நடவடிக்கை பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலிப்பதற்காகவே செய்யப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் கமெண்ட்கள் பரவின.


சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை விளக்கம்


புதிய வேக கட்டுப்பாடு விதிகள் தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளது. அதில்,”அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களால் விபத்து அதிகரிக்க வாய்ப்பிருப்பதால், வேக கட்டுப்பாட்டில் விதிமுறை அறிமுகம் செய்ய திட்டமிட்டோம். அதற்காகவே, 10 இடங்கள் கேமராக்கள் பொருத்தப்பட்டன. மற்றபடி, பொதுமக்களிடம் இருந்து அபராதம் பெறுவது நோக்கம் அல்ல. மேலும், அபராதம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.” என்று தெரிவித்துள்ளது.