காஞ்சிபுரத்தில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை தொடர் கனமழை பெய்தது.

 

தொடர் மழை

 

காஞ்சிபுரம் (Kanchipuram): தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இன்றும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் இன்று ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



 

ஜூன் 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில்: தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

சென்னை வானிலை ஆய்வு மையம் 

 

நேற்று  காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை தரமணி, காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 8 செ.மீ.மழை பதிவாகியுள்ளது. சென்னை அயனாவரம், டிஜிபி அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், ராணிப்பேட்டை மாவட்டம் மின்னல், கடலூர் மாவட்டம் சிதம்பரம், அண்ணாமலை நகரில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.

 

மூன்றாவது நாளாக காஞ்சியில் மழை

 

காஞ்சிபுரத்தில் மூன்றாவது நாளாக விடிய விடிய கன மழை பெய்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று காலை முதலே மழை பெய்வது   நின்று விட்ட நிலை காணப்பட்டு வந்தது. இந்நிலையில் திடீரென இரவு நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரத்தில் திடீரென கருமேங்கள் சூழ்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்தது.



 

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. கோடை வெப்பம் அதிக அளவில் இருந்த நிலையில் இருதினங்களாக பெய்த மழை கோடை வெப்பத்தை தணித்த நிலையில் நேற்று இரவு நேரத்தில்  மழை பெய்து வருவதால் காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில்  குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தொடர்ந்து இன்று விடியற்காலை வரை காஞ்சிபுரம் பகுதியில் மழை பெய்தது.