சென்னை ஆலந்துார், லஸ்கர் தெருவைச் சேர்ந்தவர் ரகு (49), இவர் அதே பகுதியில் பல ஆண்டுகளாக சிறிய பெட்டிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார் . இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி, ரகு தன் கடைக்கு வந்த 10 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து, தன் பாட்டியிடம் அழுதபடி சிறுமி கூறியுள்ளார். பாட்டி, பரங்கிமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், நேற்று புகார் அளித்தார்.



இதனை அடுத்து பெட்டி கடைக்காரர் ரகுவை அழைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பெட்டிக்கடைக்காரர் ரகு சிறுமியிடம் அநாகரிகமாக நடந்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் அவரை போலீசார் கைது செய்தனர். இதனை அடுத்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

 

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செங்கல்பட்டு  சிறையில் ரகு அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக செங்கல்பட்டு  சிறையில் நீதிமன்ற உத்தரவின்படி விசாரணை கைதியாக இருந்து வருகிறார்.

 



சிறைக்கு வந்ததில் இருந்தே , ரகு மன உளைச்சலுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது. ரகு விசாரணை கைதியாக நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செங்கல்பட்டு சிறையில் இருந்து வந்ததால், மன அழுத்தம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அடுத்து இன்று கைலியை பயன்படுத்தி ரகு தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதனை கண்ட சக கைதிகள் மற்றும் சிறை காவலர்கள் உடனடியாக ரகுவை மீட்டு முதல் ஒரு உதவி சிகிச்சை அளித்ததாக சொல்லப்படுகிறது.

 

இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரகு சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் செங்கல்பட்டு சிறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த செங்கல்பட்டு நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றம்சாட்டப்பட்ட ரகு தப்பிச்செல்லாமல் இருக்க காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.