காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் அடுத்துள்ள ஐயங்கார்குளம் பகுதியில், சஞ்சீவிராயர் கோவில் அமைந்துள்ளது. சஞ்சீவி ராயர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு அருகே,  உள்ள பெரிய குளத்தின்,  விஜயநகர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட அறியப்படும், 14ம் நூற்றண்டு காலத்து நடவாவிக் கிணறு என்ற சிறப்பு வாய்ந்த கிணறு ஒன்று உள்ளது.



 

"நடவாவி"

 

நடவாவி என்றால் படிக்கட்டுள்ள கிணறு என்று அர்த்தம். இந்தக் கிணற்றுக்கு செல்ல தரை மட்டத்தில் இருந்து படிக்கட்டுடன் கூடிய சுரங்கம் போன்ற பாதை உள்ளது. அந்தப் பாதையில் இறங்கிச்சென்றால் கருங்கல்லால் ஆன அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த 16 கால் மண்டபத்தைக் காணலாம். இது ஓர் அபூர்வ கட்டிட அமைப்பு என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்ற நிலையில் தரைமட்டத்தில் இருந்து கீழே செல்ல 48 படிகள் உள்ளன. இதில் 27 படிகளைக் கடந்தால் அந்த 16 கால் மண்டபத்தை நாம் அடைய முடியும்.



 

நடவாவி உற்சவம்

 

 

அத்தி வரதர் புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் சித்ரா பௌர்ணமி வெகு சிறப்பாக கொண்டாடப்படும் . வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து புறப்படும் வரதர், அந்த திருநாளில் யாகம் வளர்த்து நெருப்பாலும், நடபாவி கிணற்று நீராலும், பாலாற்றங்கரையில் காற்றாலும் அபிஷேகம் செய்யப்பட்டு, மீண்டும் வரதராஜ பெருமாளை ஆலயத்திற்கு கொண்டு வருகின்றார்கள். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த உற்சவத்தை  ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கண்டு வரதர் அருள் பெறுவார்கள். 

 



பக்தர்களுக்கு காட்சியளித்த வரதர்

 

இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி முன்னிட்டு, வரதராஜர் பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்ட  வரதர், நான்கு மாடவீதிகளில் வலம் வந்து, செவிலிமேடு, தூசி, அப்துல்லாபுரம், ஐய்கங்கார் குளம் வழியாக நடவாவி கிணற்றில் இன்று எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த உற்சவத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வரதர் அருள் பெற்றனர். நாளை வரதர் நடவாவி கிணற்றில் இருந்து புறப்பட்டு பாலாறு,  செவிலிமேடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறமாக விளக்கடிக்கோயில் தெரு, காந்தி ரோடு வழியாக  மாட வீதியை அடைந்து, வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வரதர் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.