தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து உள்ளது. காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் கோடை வெப்பம் கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்து வருகிறது.



 

காஞ்சிபுரத்தை புரட்டி எடுத்த கனமழை:

 

காலை முதலே கோடை வெயில் காய்ந்து வந்த நிலையில் மாலை நேரத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து காஞ்சிபுரம், ஒரிக்கை, செவிலிமேடு, வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டாலும் கோடை வெப்பம் தணிந்து உள்ளதால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



சுமார் இரண்டே மணி நேரத்தில் காஞ்சிபுரம் வட்டாரத்தில் 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.காஞ்சிபுரம் மாநகரில் முக்கிய பிரதான சாலைகளான கீரை மண்டபம், மூங்கில் மண்டபம், மேட்டு தெரு, காந்தி சாலை உள்ளிட்ட முக்கிய பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் சும்மா 2 கிலோமீட்டர் தூரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல். வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து செல்கின்றனர்.

 


15 மாவட்டங்களுக்கு கனமழை


05.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, நாமக்கல்,  கிருஷ்ணகிரி,  திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 




06.05.2023 மற்றும் 07.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


08.05.2023 மற்றும் 09.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


அதிகபட்ச வெப்பநிலை : 


06.05.2023 முதல் 09.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 4  டிகிரி செல்சியஸ் உயரக்கூடும். 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35–36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  


06.05.2023:  குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள்,  தமிழக கடலோரப்பகுதிகள், தென்கிழக்கு  - தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் தெற்கு பகுதிகள்,  தெற்கு அந்தமான் கடல்  பகுதிகளின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.


07.05.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தெற்கு அந்தமான் கடல்  பகுதிகள், தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் தெற்கு பகுதிகள் மற்றும் இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.