சென்னை பிராட்வே பகுதியில் மாநகராட்சிக்கு தொழில்வரி, வாடகை செலுத்தாமல் மற்றும் உரிமம் இல்லாமல் இயங்கிய 70 கடைகளுக்கு சீல் வைத்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. 


பெருநகர சென்னை மாநகராட்சியில் 2011-ம் ஆண்டில் 10 மண்டலங்களும் 155 வார்டுகளும் இருந்தது. சென்னை மாநகராட்சி விரிவாக்கத்திற்கு பிறகு மண்டலங்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிக்கப்பட்டு 200 வார்டுகளாக மறு சீரமைப்பு செய்யப்பட்டது. இந்த பகுதியில் லட்சக்கணக்கான கடைகள், வர்த்தக நிறுவனர்கள் உள்ளன, ஒவ்வொரு தெருவிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடைகளின் வகை மற்றும் பரப்பளவு அடிப்படையில் கடைகளுக்கான உரிமம் தொகை ஓராண்டுக்கு குறைந்தபட்சம் 600 ரூபாயில் இருந்து 12 ஆயிரத்து 500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஏராளமான  கடைகள் உரிய அனுமதி இல்லாமல் செயல்படுவதாக புகார் வந்தது. இதனையடுத்து உரிமம் இல்லாத பல்வேறு கடைகளுக்கு ஏற்கனவே மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். 


சென்னை மாநகராட்சி பகுதிகளில் நீண்ட காலமாக தொழில் வரி மற்றும் வணிக உரிமம் பெறாமல் சிலர் கடைகள் நடத்தி வருவதால் சென்னை மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொழில் வரி செலுத்தாத கடைகள், தொழில் உரிமம் பெறாமல் செயல்பட்டு வரும் கடைகள், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வடகை தொகை நிலுவையில் வைத்துள்ள கடைகள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார்.


அதன்படி சென்னை மாநகராட்சி பகுதிகளில் தொழில் உரிமம், தொழில் வரி, வாடகை தொகை செலுத்தாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை பிராட்வே பகுதி மற்றும் தங்க சாலையில் தொழில்வரி செலுத்தாத கடைகள் மற்றும் தொழில் உரிமம் பெறாத கடைகள், மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு வாடகை செலுத்தாத மொத்தம் 70 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். குறிப்பிட்ட இந்த ஒரு பகுதியில் மட்டும் தொழில்வரி மற்றும் உரிமம் பெறாமல் செயல்பட்ட கடைகளால் சென்னை மாநகராட்சிக்கு சுமார் 30 லட்சம் ரூபாய் மேல் நிலுவையில் உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.


மேலும், சீல் வைக்கப்பட்ட கடைகள் மீண்டும் தொழில் வரி மற்றும் உரிமம் பெற்றதும், நிலுவை வாடகை செலுத்தியதும் கடைகளின் சீல் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


CM Stalin: "மாநிலங்களோடு மட்டுமல்ல; உலக நாடுகளோடு போட்டி இருக்க வேண்டும்" - முதலமைச்சர் ஸ்டாலின்


மின் கட்டண உயர்வை கண்டித்து குறுந்தொழில் கூடங்கள் கதவடைப்பு போராட்டம் ; 25 ஆயிரம் தொழிற்கூடங்கள் மூடல்


TNPSC Alert: ஜாக்கிரதை... தேர்வு முடிவுகள் குறித்து போலி பட்டியல்: எச்சரிக்கை விடுத்த டிஎன்பிஎஸ்சி