தொழில் நகரமான கோவையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறுந்தொழில் கூடங்கள் இயங்கி வருகின்றன. இதனை நம்பி 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறுந்தொழில் கூடங்கள் பெரிய நிறுவனங்களிடம் இருந்து ‘ஜாப் ஆர்டர்’ முறையில் ஆணைகளை பெற்று உற்பத்தி செய்து தருகின்றனர். இந்த நிலையில் உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தின்படி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணத்தை செலுத்த வேண்டி உள்ளதால், ஒருநாளின் உச்சப்பட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்ட மின்கட்டணத்தை (Peak Hour Charges) குறைக்கும்படி பல்வேறு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பீக் ஹவர்களுக்கு வசூலிக்கப்படும் மின்கட்டணத்தை 25 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக தமிழ்நாடு அரசு குறைத்துள்ளது.
அதேசமயம் தமிழ்நாடு அரசு சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணம் குறைப்பு செய்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது எனவும், இது வெறும் கண் துடைப்பு. குறுந்தொழில் முனைவோர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை எனவும் குறுந்தொழில் முனைவோர்கள் குற்றம்சாட்டி இருந்தனர். இதனிடையே பல்வேறு தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியா சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து இன்று ஒரு நாள் கதவடைப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவித்து இருந்தனர். இதன்படி இன்று கோவையில் பல்வேறு பகுதிகளில் உள்ள குறுந்தொழில் கூடங்கள் மூடப்பட்டுள்ளன.
இது குறித்து பேசிய தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜேம்ஸ், “இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள சிறு குறு தொழில் செய்வோர் ஏற்கனவே கடந்த இரண்டரை வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக கடுமையாக பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் தமிழக அரசு அறிவித்த, மின் கட்டண உயர்வு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
தொழில் நிறுவனங்களுக்கு காலை மற்றும் மாலையில் 6 முதல் 10 மணி வரை என நாள்தோறும் 8 மணி நேரத்திற்கு பீக் ஹவர் கட்டணம் நிர்ணயித்துள்ளது. இது 100 சதவீதம் ஒத்துவராது. இதில் 25 சதவீத கூடுதல் கட்டணத்தில் 10 சதவீதம் மட்டுமே அரசு குறைத்துள்ளது. பீக் ஹவர் கட்டணத்தை நீக்க வேண்டும். 112 கிலோ வாட் வரையிலான நிலை கட்டணத்திற்கு 50 ரூபாய்க்குள் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். இதேபோல நிலை கட்டண உயர்வை ஏற்க முடியாது. இதன் காரணமாக 50, 60 சதவீதம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இந்த சுமையை குறுந்தொழில் முனைவோர்களால் தாங்க முடியாது.
குறிப்பாக சிறு குறு தொழில்கள் முடங்கும் அளவிற்கு பீக் அவர் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதன் காரணமாக தமிழகத்தின் அடையாளமாக உள்ள சிறு குறு தொழில் முழுவதும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குறு சிறு தொழில்கள் முனைவோர்கள் பயன்படுத்தும் LT.CT (112 kw) -க்கான பீக் அவர் கட்டண உயர்வை தமிழக அரசு முழுமையாக திரும்ப பெற வேண்டும். LT.CT -யின் மின்சாரத்தை பயன்படுத்தும் குறு சிறு தொழில்களை பாதுகாக்க 112 kw வரை முன்பு இருந்த நிலைக்கட்டணம் ரூபாய் 35 மட்டும் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு வகையான பீக் அவர் கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 20 அமைப்புகள் சார்பாக ஒருநாள் கதவடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில் கூடங்கள் பங்கேற்றுள்ளன. இதன் காரணமாக கோடிக்கணக்கான ரூபாய் அளவிலான உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சிவானந்தா காலணி பகுதியில் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.