ஒருங்கிணைந்த பொறியியல்‌ பணிகளில்‌ அடங்கிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள்‌ குறித்த போலியான பட்டியல்‌ (Fake List) சமூக வலைதளங்களில்‌ பரவி வருவதாகவும் அதனை விண்ணப்பதாரர்கள்‌ கருத்தில்‌ கொள்ள வேண்டாம்‌ எனவும் டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. 


தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ 02.07.2022 முற்பகல்‌ மற்றும்‌ பிற்பகலில்‌ நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல்‌ பணிகளில்‌ அடங்கிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள்‌ குறித்த போலியான பட்டியல்‌ (Fake List) சமூக வலைதளங்களில்‌ பரவி வருவதாகத் தெரிய வருகிறது. இதனை விண்ணப்பதாரர்கள்‌ கருத்தில்‌கொள்ள வேண்டாம்‌ எனத் தேர்வாணையம்‌ கேட்டுக்கொள்கிறது.


தேர்வாணையத்தின்‌ அனைத்து தேர்வு முடிவுகளும்‌ தேர்வாணைய இணையதளத்தில்‌ மட்டுமே வெளியிடப்படும்‌. அதனை https://www.tnpsc.gov.in/ என்ற தேர்வாணைய இணையதளத்தின்‌ மூலம்‌ அறிந்து கொள்ளுமாறும்‌ தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது.


இது போன்ற பொய்யான தகவல்களை பரப்புபவர்களின்‌ மீது கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்‌ எனவும்‌ தெரிவிக்கப்படுகிறது.


தேர்வாணையத்தின்‌ தெரிவுகள்‌ அனைத்தும்‌ விண்ணப்பதாரர்களின்‌ தர வரிசைப்படியே மேற்கொள்ளப்படுகின்றன. பொய்யான வாக்குறுதிகளைக்‌ கூறி, சட்டத்திற்கு புறம்பாக வேலை வாங்கித்தருவதாகக்‌ கூறும்‌ இடைத் தரகர்களிடம்‌ விண்ணப்பதாரர்கள்‌ மிகவும்‌ கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்படுகின்றனர்‌.


இவ்வாறு தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணைய தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌ தெரிவித்துள்ளார்.


 






*
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு குறித்து அறிவிப்பை கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி அன்று  வெளிட்டது.


அந்த அறிவிப்பில், தேர்வு ஜூன் 26ஆம் தேதி முற்பகலிலும் பிற்பகலிலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் அந்தத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து ஜூலை 2ஆம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும்  ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு ஜூலை 2ஆம் தேதி நடைபெற்றது. 


இந்தத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. இந்த நிலையில் இதை மறுத்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதையும் வாசிக்கலாம்: Free Underwear: அரசுப்பள்ளி மாணவிகளுக்கு இலவச உள்ளாடைகள்: திரும்பி பார்க்க வைக்கும் தன்னார்வ அமைப்பு!