கொரோனா ஞாயிறு ஊரடங்கில் ஆள் அரவமற்றிருக்கும் சென்னையின் போரூர் சாலையில் தவித்தபடி அமர்ந்திருக்கிறார் அந்த முதியவர். ‘கடையெல்லாம் மூடியிருக்குறதால டீ வாங்கக் கூட காசில்லை. பசிக்குது. தண்ணி குடிச்சு பசிய அடக்கப் பாத்தா, குடிக்க தண்ணி கூட இல்லை’ எனச் சுருண்டு கிடந்தவருக்கு உணவுப் பொட்டலம் ஒன்றை நீட்டுகிறார் ப்ரியா. ப்ரியா அந்த முதியவருக்கு அளித்தது உணவுப் பொட்டலம் மட்டுமல்ல, குடிக்க நீர்கூடக் கிடைக்காமல் வாழ்வின் மீது பிடிப்பிழந்து கிடந்தவருக்கு அளித்த நம்பிக்கை. ப்ரியா தன்னைத் திருநங்கையாக அடையாளப்படுத்திக் கொள்பவர். தமிழில் காஞ்சனா திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
மற்றொரு திருநங்கையான பாபி பகிர்ந்து கொண்ட அனுபவம் நம்மை நெகிழவைத்தது, “உடலில் துணி விலகியது கூடத் தெரியாத நிலையில் ஒரு பாட்டியம்மா சாலையோரம் படுத்திருந்தார். அவரால் பேசக்கூட முடியவில்லை. ஆனால் நாங்கள் உணவுப் பொட்டலத்தை நீட்டியதும் அவரது கண்களில் நன்றியையும் அன்பையும் காணமுடிந்தது” என்கிறார். இத்தனைக்கும் பாபியின் பொருளாதாரமே ஊரடங்கு மற்றும் கொரோனா பேரிடரால் சிக்கலில்தான் இருக்கிறது.
பாபி ஒரு பயோகெமிஸ்ட்ரி பட்டதாரி. ஆனால் திருநங்கை என்கிற அடையாளத்தால் நிரந்தரமாக வேலை கிடைக்காமல் தவிக்கிறார். கடந்த வருடம் வேலைக்குச் சென்ற இடத்திலும் திருநங்கை என்கிற அடையாளத்தைக் காரணம்காட்டி சம்பளம் தராமல் ஏமாற்றியுள்ளனர். கடைகளில் பணம் வசூலித்துத்தான் அன்றாட வாழ்வை நகர்த்துகிறார். ஆனால் , ’அந்தக் கவலையெல்லாம் மறந்து என்னால் இன்று ஒரு இரவு நிம்மதியாகத் தூங்கமுடியும்’ என நம்மிடம் பகிர்கிறார் பாபி.
கொரோனா இரண்டாம் அலை பாதிப்பில் தத்தளிக்கும் நாட்டில் ஊரடங்கு, சமூக இடைவெளி, அறையில் தனிமைப்படுத்திக் கொள்ளும் வசதிவாய்ப்பு எல்லாம் சமூகத்தின் அனைத்து தட்டு மக்களுக்கும் கிடைத்துவிடுவதில்லை. வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டால் அல்லது ஞாயிறு கடைகள் மூடப்பட்டால் ‘ஸ்விக்கி’,’ சோமாட்டோ’ கைகொடுக்கும் என்கிற நம்பிக்கையெல்லாம் தனக்கு மீது கூரை இருப்பவர்களுக்கு மட்டும்தான். இந்த ஊரடங்கும் சமூக இடைவெளியும் சாலையோரம் வசிப்பவர்களுக்கும், பொருளாதாரத்துக்காக உடல் உழைப்பை நம்பியிருப்பவர்களுக்கும், தினசரி கூலி வேலை செய்பவர்களுக்கும் சாபம்தான்.
இந்தக் காலத்தில் இப்படி உணவற்றுத் தவிக்கும் மக்களுக்காக பிரியா, பாபி போன்ற திருநர்கள் சிலர் சென்னையில் ஒன்றிணைந்து உருவாக்கியிருப்பதுதான் ‘ஒரு பிடி அன்பு- திருநர் கிச்சன்’. சென்னையின் வடக்கு மற்றும் தெற்கில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த சமையற்கூடம் வாரயிறுதி ஊரடங்கின்போது மட்டும் இயங்குகிறது. முழுக்க முழுக்கத் திருநர்களே சமைத்து அவர்களே நேரடியாகச் சென்று மக்களிடம் விநியோகிக்கிறார்கள்.
கால் டாக்ஸி ஓட்டுபவர்கள், தூய்மைப் பணியாளர்கள், நலிவடைந்த பெண்கள், தினசரி கூலிவேலைக்குச் செல்பவர்கள் என அன்றாட வருமானத்தை நம்பியிருப்பவர்களுக்குக் கையில் காசு இருந்தாலும் உணவு வாங்குவதற்கான கடைகள் வார இறுதிகளில் திறந்திருக்காது. யாருக்கு உணவு அத்தியாவசியமோ அவர்களுக்கு உணவு கிடைப்பதில்லை.
இதனை ஒருங்கிணைத்தவர்களில் ஒருவரான ஸ்ரீஜித் பேசுகையில் ‘முதல் லாக்டவுன் தொடங்கியே நண்பர்கள் நாங்கள் ஒன்றிணைந்து மக்களுக்கானப் பல உதவிகளை மேற்கொண்டுவருகிறோம். அதன் நீட்சிதான் இந்த திருநர் கிச்சன். கொரோனா பேரிடரால் உணவு கிடைக்காமல் சிலர் இறந்துபோனார்கள் என்கிற செய்திதான் நாங்கள் இதனைத் தொடங்க காரணம். அதன்படி சென்னையின் தெற்கிலும் வடக்கிலும் அதற்கான சமையற்கூடங்களை உருவாக்கினோம். போரூர் சமையற்கூடத்திலிருந்து ஐயப்பந்தாங்கல், போரூர், பூந்தமல்லி, கரையான்சாவடி உள்ளிட்ட பகுதிகளுக்கும் சுனாமி குடியிருப்புப் பகுதிகளில் உணவு தயார்செய்து அந்தப் பகுதியின் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கும் உணவளித்தோம். திருநங்கைகளே சமைத்து அவர்களே நேரடியாக உணவைக் கொண்டுபோய் சேர்ப்பதுதான் இதன் திட்டம். வாரயிறுதி ஊரடங்கின்போது மட்டும் இது இயங்கும். அதே சமயம் அரசின் கட்டுப்பாடுகள் அத்தனையும் பின்பற்றி முகக்கவசம், கையுறை அணிந்து சுத்தமாகவும் சுகாதாரத்துடனும் உணவுகளைத் தயார்செய்வது மற்றும் விநியோகிப்பது என்பதில் மிகக் கவனமாக இருந்தோம். ஐ.டி.துறையில்,நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு ஆர்டர் செய்தால் வீட்டு வாசலில் உணவு வந்து நிற்கும். ஆனால் கால் டாக்ஸி ஓட்டுபவர்கள், தூய்மைப் பணியாளர்கள், நலிவடைந்த பெண்கள், தினசரி கூலிவேலைக்குச் செல்பவர்கள் என அன்றாட வருமானத்தை நம்பியிருப்பவர்களுக்கு கையில் காசு இருந்தாலும் உணவு வாங்குவதற்கான கடைகள் வாரயிறுதிகளில் திறந்திருக்காது. யாருக்கு உணவு அத்தியாவசியமோ அவர்களுக்கு உணவு கிடைப்பதில்லை. இப்படி ஒடுக்கப்படுபவர்களின் வலி மற்றொரு ஒடுக்கப்படும் மனிதரால்தான் உணரமுடியும். இந்த வலிக்கான ஆறுதல்தான் அதே சமூகத்தால் ஒடுக்கப்படும் திருநங்கைகள் தங்கள் உழைப்பில் உருவாக்கியிருக்கும் இந்தக் கிச்சன். அதனால்தான் இதற்கு ‘ஒரு பிடி அன்பு’ எனப் பெயர் வைத்திருக்கிறோம்’ என்கிறார்.
ஒரு பிடி அன்பு, ஓராயிரம் அன்பின் விதைகளை விதைக்கட்டும்!