கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் தேர்தல் பேரணிகளை தடுக்காதது ஏன் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் எனவும் காட்டமாக கூறியது.


அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வழக்கு விசாரணையின் போது “தேர்தல் முடிவுகளை வெளியிட செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன என்பதை முழுமையான அறிக்கையாக வரும் 30ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அரசியல் கட்சிகளை தேர்தல் பேரணி நடத்த விடாமல் தடுக்காமல் என்ன செய்து கொண்டிருந்தீர்கள், இன்றைக்கு உள்ள நிலைக்கு முழுமையாக தேர்தல் ஆணையமே காரணம்” என தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி கூறினார்.




கொரோனா காலத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென முழுமையான விதிமுறைகள் உள்ளன, ஆனால் எந்த விதிகளும் பின்பற்றப்படவில்லை, மக்களுடையை உடல்நலமும் சுகாதரமுமே முக்கியம், மக்கள் உயிரோடு இருந்தால் மட்டுமே அவர்களால் ஜனநாயக கடமையை ஆற்ற முடியும், உரிமைகளை நிலைநாட்ட முடியும் எனவும் உயர்நீதிமன்றம் கூறியது.