பண்டைக் காலத் தமிழகத்தில் ஓலைச் சுவடி, நடுகல், கல்வெட்டு, செப்பேடு ஆகியவற்றில் தமிழ்மொழி எழுதப்பட்டு வந்துள்ளது. இவற்றில் காலத்தால் முற்பட்ட ஓலைச் சுவடிகள் கிடைக்கப் பெறவில்லை; அண்மைக் காலத்திற்கு உரியவையே கிடைத்துள்ளன. ஆனால் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டுகளும் செப்பேடுகளும் கிடைத்துள்ளன. அவற்றில் தமிழ் மொழியை எழுதப் பயன்படுத்திய எழுத்து வடிவங்களைத் தமிழி, தமிழ், வட்டெழுத்து என்று பெயரிட்டு அழைக்கின்றோம்.
தமிழி
தமிழ் மொழியின் தொன்மையான எழுத்து வடிவங்களை அறிந்து கொள்ளக் குகைக் கல்வெட்டுகள் பெரிதும் உதவுகின்றன. இக்கல்வெட்டுகளில் எழுதப் பெற்றுள்ள எழுத்து வடிவங்களுக்குப் பெயரிடுவதில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஒரு சிலர் தமிழி என்று குறிப்பிடுகின்றனர். வேறு சிலர் தமிழ்-பிராமி என்று குறிப்பிடுகின்றனர்
வட்டெழுத்துக்கள்
வட்ட வடிவமாக எழுதப் பெற்றதால் இவை வட்டெழுத்துக்கள் எனப் பெயர் பெற்றன. ஏறத்தாழ பொ.ஆ.மு. 500 முதல் பொ.ஆ. 300 வரை வழக்கிலிருந்த சங்ககாலத் தமிழ் எழுத்துக்களின் (தமிழி) வளர்ச்சி மாற்ற நிலையே வட்டெழுத்துக்களாகும். இவ்வெழுத்து எக்காலம் முதற்கொண்டு இப்பெயர் பெற்றது என அறிய முடியவில்லை. இருப்பினும் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராக்கிரம பாண்டிய தேவரின் திருக்குற்றால நாதர் கல்வெட்டு இவ்வெழுத்தை ‘வட்டம்’ என்று குறிப்பிடுகிறது. “திருமலையில் கல்வெட்டு வட்டமானதால் தமிழாகப் படியெடுத்து” என்று வாசகம் உள்ளது. தற்பொழுது இந்த எழுத்துக்களை படிப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவிலே இருந்து வருகிறது. இந்நிலையில் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தமிழி எழுத்துக்கள் மற்றும் வட்டெழுத்துக்களை சரளமாக படித்து வருகிறார்.
இதுகுறித்து சிறுமி மகதி நம்மிடம் பேசுவையில், ”நான் நான்காம் வகுப்பு படித்து வருகிறேன். தமிழ் எழுத்துக்களை படிக்க என்னுடைய அப்பா பயிற்சி பெற்று இருக்கிறார். என் தந்தை அது குறித்து பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து அவரிடம் என்ன கற்றுக் கொண்டிருக்கிறீர்கள், எனக்கும் கற்றுக் கொடுங்கள் என கேட்டேன். அவர் எனக்கு கற்றுக் கொடுத்தார். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட எழுத்துக்களை எப்படி கேட்டாலும் எழுதுவேன் அதை படிப்பேன்” என தெரிவிக்கிறார்
அவரது தந்தை மதுரை வீரன் பேசுகையில், ”எனக்கு தொல்லியலில் ஆர்வம் அதிகம். நான் கற்றுக்கொண்ட விஷயங்களை என் மகளுக்கு சொல்லிக் கொடுத்தேன். சுமார் 2000 ஆண்டுகள் பழமையான எழுத்துக்கள். வட்டெழுத்துக்கள் படிப்பது சற்று கடினமானது. அதையும் என் மகள் கற்றுக் கொண்டாள். இரண்டையும் சரளமாக படிக்கிறார்” என தெரிவித்தார்