செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் மிக முக்கிய கோவிலாக இருந்து வருகிறது. இந்த கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில், உள்ளூர் மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு, மாலை அணிவிக்கும் சீசனில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த பல லட்சக்கணக்கான, பக்தர்கள் குறிப்பாக பெண்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு படையெடுப்பது வழக்கம். இதேபோன்று தைப்பூசம் மற்றும் ஆடிப்பூரம் போன்ற திருவிழாக்களின் போதும் அதிகளவு பக்தர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு வருவது வழக்கமாக உள்ளது.

Continues below advertisement

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் ஆடிப்பூரம் விழா

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படும் முக்கிய விழாவாக இருந்து வருகிறது. மேல்மருவத்தூர் கோயிலில் ஆடிப்பூர விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக கஞ்சி வார்த்த நிகழ்வு கொண்டாடப்படுவது வழக்கம்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் கைகளில் மண் பானைகளில் கஞ்சிக்கலயம் சுமந்து, பல கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரையாக வந்து, அம்மனுக்கு படைக்கின்றனர். இந்த கஞ்சி சமத்துவ கஞ்சியாக பக்தர்களுக்கு மீண்டும் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி ஆடிப்பூரத்திற்கு முன்னாள் நடைபெறும். 

Continues below advertisement

ஆடிப்பூரத்தின் அன்று சுயம்புவாக காட்சியளிக்கும் ஆதிபராசக்திக்கு, பக்தர்கள் தாங்களே பால் அபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். பொதுவாக கோவில்களில் அர்ச்சகர்கள் மட்டுமே அபிஷேகம் செய்யும் நிலையில், இங்கு பக்தர்கள் தாங்களே கருவறைக்குள் சென்று அபிஷேகம் செய்வது ஒரு தனிச்சிறப்பு. இதன் மூலம் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றும், ஆன்மீக வளர்ச்சி ஏற்படும் என்றும் நம்பப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை 

இந்த ஆண்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் ஆடிப்பூர விழாவானது, வருகின்ற ஜூலை மாதம் 28ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இவற்றை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி வேலை நாட்களாக செயல்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஜூலை 26, 27 மற்றும் ஜூலை 28 என மூன்று நாள் தொடர் விடுமுறை கிடைக்கவுள்ளது.