செங்கல்பட்டு மாவட்டத்தில் மின்னணு பயிர் கணக்கீடு பணியினை மேற்கொள்ள தகுதியுடைய நிறுவனத்தினர் வரும் 24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தி.சினேகா தெரிவித்துள்ளார்.

மின்னணு பயிர் கணக்கீடு பணி

தமிழ்நாட்டில் மின்னணு பயிர் கணக்கீடு பணி (Electronic Crop Calculation Work) என்பது விவசாயிகளின் நில விவரங்கள் மற்றும் பயிர் சாகுபடி, குறித்த தகவல்களை மின்னணு முறையில் சேகரித்து புதுப்பிக்கும் ஒரு முக்கியமான திட்டமாகும்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தி.சினேகா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, செங்கல்பட்டு மாவட்டத்தில் மின்னணு பயிர் கணக்கீடு பணியானது 2024-ஆம் ஆண்டு ரபி பருவம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பயிர் கணக்கீடானது விவசாயிகளின் விளைநிலங்களில் சர்வே எண் உட்பிரிவு, பயிர், பாசன முறை உள்ளிட்ட விவரங்களை புகைப்படத்துடன் கூடிய செயலி மூலம் இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இந்த ஆண்டிற்கு மூன்று முறையாக காரீப், ரபி மற்றும் கோடைப் பருவங்களில் இந்த மின்னணு பயிர் கணக்கீடு மேற்கொள்ளப்படுகிறது. 

விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடப்பாண்டு 2025-26 இந்த மின்னணு பயிர் கணக்கீடு பணியானது ஒப்பந்த பணியாளர் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. ஒப்பந்த பணியாளர் நிறுவனம் மாவட்ட அளவிலான தேர்வுக்குழு மூலம் வரையறுக்கப்பட்ட விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. விருப்பமுள்ள நிறுவனங்கள் விரிவான விவரங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு வேளாண்மை பட்டதாரி அல்லது பட்டய வேளாண்மை படித்தவர் அல்லது இதர பட்டப்படிப்பு படித்தவர்கள் மேலும இணையதள ஆன்ட்ராய்டு செயலியை உபயோகிக்க தெரிந்தவர்களாக உள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம். ஒப்பந்த பணியாளர் நிறுவனம் மேலே குறிப்பிட்ட பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும். அந்தந்த கிராமங்களிலுள்ள படித்த இளைஞர்களை தேர்வு செய்ய வேண்டும்.  

எவ்வளவு ஊதியம் வழங்கப்படும் ?

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை 651 ஆகும். இதிலுள்ள சர்வே எண்களை பதிவு மேற்கொள்ளுதல் அடிப்பைடயில் ஒரு சர்வே எண்ணுக்கு ரூ.20 வழங்கப்படும். 2 சதவீதம் சேவை வரி உள்பட மேற்கண்ட தொகை வழங்கப்படும். மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு ஒப்பந்த பணியாளர் நிறுவனத்தினை தேர்வு செய்யும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவன பணியாளர்கள் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 1-ஆம் தேதி முதல் பணியினை தொடங்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் வரும் 24-ம் தேதிக்குள் விண்ணப்பத்தினை பதிவு தபாலில் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

25-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையிலான தேர்வுக்குழு ஒப்பந்தகாரர்களை தேர்வு செய்யும். 651 வருவாய் கிராமங்களுக்கும் ஒரு வருவாய் கிராமத்திற்கு ஒரு நபர் வீதம் 651 பணியாளர்களை தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனம் தேர்ந்தெடுத்து பட்டியல் தர வேண்டும். இப்பணியினை எவ்வித தொய்வும் இன்றி உரிய பயிர் பருவ காலத்தில் செய்து முடித்து கொடுக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.