இப்போது நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வர ஆரம்பித்து விட்டார்கள், சினிமாவை பார்த்த உடன் அங்கேயே மறந்து விட வேண்டும், அதன் பிறகு கட்சி தான் ஞாபகத்தில் வர வேண்டுமே தவிர நடிகர்கள் ஞாபகம் வரக்கூடாது என திமுக தொண்டர்களுக்கு அமைச்சர் அன்பரசன் வேண்டுகோள் விடுத்தார். இது விடியாத ஆட்சி, விடியாத ஆட்சி என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். விடியாத மூஞ்சிக்கு விடியாத ஆட்சி மாதிரி தான் தெரியும் எனவும் அமைச்சர் விமர்சனம் செய்தார்.


உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம்


செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் - கூடுவாஞ்சேரியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், தமிழக குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். 


தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், இப்போது நடிகர்கள் எல்லாம் வர ஆரம்பித்து விட்டார்கள், சினிமாவை பார்த்த உடன் வந்து விட வேண்டும், அங்கேயே மறந்து விட வேண்டும், சினிமாவை சும்மா பார்க்கவில்லை, நம்ம காசு கொடுத்து பார்க்கிறோம், பார்த்தோமா, ரசித்தோமா அதோடு வெளியில் வந்து விட வேண்டும், அதன் பிறகு கட்சி தான் ஞாபகத்தில் வர வேண்டுமே தவிர நடிகர்கள் ஞாபகம் வரக்கூடாது என திமுக தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். 


இது விடியாத ஆட்சி, விடியாத ஆட்சி என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார். விடியாத மூஞ்சிக்கு விடியாத ஆட்சி மாதிரி தான் தெரியும் என பேசினார். தேர்தல் அறிக்கையில் கூறிய 90% வாக்குறுதிகளுக்கு மேல் நிறைவேற்றி உள்ளதாகவும், மகளிர் உரிமைத் தொகை ஒன்றிரண்டு பேருக்கு வந்திருக்காது, இன்னும் இரண்டு மாதங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள், நிதி நெருக்கடி சரியாக இல்லை பிறகு அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என பேசினார்.