செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் மூலதன கட்டுமான செலவு மட்டுமே வசூல் செய்யப்பட்டதாக ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.


செங்கல்பட்டு பரனுர் சுங்கச்சாவடி - Paranur toll plaza


செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், நீண்ட காலமாக செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியை மூட வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். வாகன ஓட்டிகளும் தொடர்ந்து இந்த சுங்கச்சாவடி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.


தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்


இதனிடையே தாம்பரம் சிட்லபாக்கத்தை சேர்ந்த தயானந்த கிருஷ்ணன் கேட்ட கேள்விக்கு ஆர்டிஐ அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியான தகவலின் அடிப்படையில், “46 கி.மீ தூரம் உள்ள பரனூர் சுங்கசாலை இரும்புலியூரில் தொடங்கி மேலவளம்பேட்டை நெல்வாய் சந்திப்பில் முடிவடைகிறது. இந்த சுங்கச் சாலை 2004 அக். நான்கு வழிச்சாலையாகவும் 2023 மே மாதம் 8 வழிச்சாலையாகவும் மாற்றப்பட்டது.


இந்த சாலை அமைக்க மொத்தம் 1036.91 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் 2005 ஏப்.முதல் 2024 வரை ரூ.596.80 கோடி மட்டுமே சுங்க கட்டணமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. அதாவது 19 ஆண்டுகள் 5 மாதங்களில் 57.6% மூலதன கட்டுமான செலவு மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது.


மீதமுள்ள மூலதன செலவில் மீட்க வேண்டிய தொகை 440.11 கோடி ரூபாயாக உள்ளது. 42.4% சுங்க கட்டணம் இன்னும் நிலுவையில் உள்ளது,” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் நாள் ஒன்றுக்கு 53,680 வாகனங்கள் கடந்து செல்கின்றன. பல்வேறு அபிவிருத்தி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் சுங்கக் கட்டணம் இன்னும் 42%க்கும் மேல் வசூல் செய்ய வேண்டும் என்பது பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கிடைத்த முக்கிய தகவல்கள் என்ன ?


விபத்துகளும் தொடர்ந்து இந்த சுங்கச்சாலையில் நடைபெறுகிறது.‌ இதன் காரணமாக இந்த சாலையை பயன்படுத்த வாகன ஓட்டிகள் மிகவும் அச்சமடைகின்றனர்.


மொத்த விபத்துக்கள் விவரம்


2018-19 முதல் 2023-24 வரை (6 ஆண்டுகள் )


இதுவரை இந்த சாலைகளில் நடைபெற்ற மொத்த விபத்துக்கள் எண்ணிக்கை: 1023


ஆறு ஆண்டுகளில் விபத்துக்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை : 223


விபத்துக்களில் பெரிய காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை : 481


விபத்துக்களில் சிறு காயம் அடைந்தவர்கள் : 1102


போக்குவரத்து தாமதம் மற்றும் விபத்து காலதாமதத்தை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ?


1) தாம்பரத்தில் இருந்து மஹிந்திரா சிட்டி வரை 8 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படுகிறது. இதற்கான அடுத்தடுத்த கட்டப் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


2) பரனூர் முதல் ஆத்தூர் வரையிலான 50 கிமீ தூரத்திற்கு pot- hole அகற்றும் முக்கிய பேட்ச் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன


3) நீண்டகாலமாக உள்ள  பிளாக்-ஸ்பாட் (அடிக்கடி மரண விபத்துகள் ஏற்படும் இடங்கள்) - சுரங்கப்பாதை / மேம்பாலம் வழங்குவதன் மூலம் விபத்துகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.


4) பல்வேறு குறுகிய கால பிளாக்-ஸ்பாட் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன


5) நடை மேம்பாலங்கள் - லிப்ட் வசதியுடன் கட்டுமான பணி -பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் நடைபெற்று வருகிறது


6) சாலைப் பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் பிற சரிசெய்தல் நடவடிக்கைகள், வழக்கமான செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஒப்பந்ததாரர் மூலம் மேற்கொள்ளப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.