செங்கல்பட்டில் இன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்திய மதுவிற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் கலந்து கொண்டார்


 


 செங்கல்பட்டு விழிப்புணர்வு பேரணி


 


செங்கல்பட்டு ( Chengalpattu News ) : செங்கல்பட்டு மதுவிலக்கு அமலாக்கத்துறை சார்பில் வெண்பாக்கம் பகுதியில், செயல்பட்டு வரும் அரசு பள்ளியிலிருந்து, தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பள்ளி , மாணவ மாணவிகள் கலந்து கொண்ட போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முன்னதாக இந்தப் பேரணியை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் துவக்கி வைத்தார். 


 




 மதுவிற்கு எதிரான கோஷங்கள்


 


300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி மதுவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பி பேரணையாக நடந்து சென்றனர். மேலும் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்தும் கோஷங்களை எழுப்பியவாறு, மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் பொதுமக்களுக்கு போதை மற்றும் மதுவால் ஏற்படும் தீமையில் குறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. 




 பேரணியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்



வெண்பாக்கம் பகுதியில் இருந்து புறப்பட்ட பேரணையில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் கலந்துகொண்டு, மாணவ மாணவிகளுடன் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முக்கிய சாலையில் நடைபெற்ற பேரணியில் மாவட்ட ஆட்சியர் நேரடியாக கலந்து கொண்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தியது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து பேரணி செங்கல்பட்டு திண்டிவனம் சாலை வழியாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இந்த பேரணிக்கான ஏற்பாட்டினை பள்ளிக்கல்வித்துறை மற்றும் மதுவிலக்கு அமலாக்கத்துறை இணைந்து செய்திருந்தனர்.




பொதுவாக விழிப்புணர்வு பேரணிகளை மாவட்ட ஆட்சியர்கள் அல்லது அரசு துறை அலுவலர்கள் துவக்கி வைப்பது மட்டுமே வழக்கமாக இருந்து வருகிறது. ஒரு சில பேரணிகளில் மட்டுமே அரிதாக மாவட்ட ஆட்சியர் அல்லது அரசு துறை அதிகாரிகளோ கலந்து கொள்வார்கள். ஆனால் இன்று நடைபெற்ற பேரணியில் மாணவ மற்றும் மாணவிகளுடன் கலந்து கொண்டு, பேரணியில் பங்கு பெற்ற சம்பவம் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இது போன்ற விழிப்புணர்வு பேரணிகள் கண் துடிப்புக்கு நடைபெறாமல், முக்கிய அதிகாரிகளின் கண்காணிப்பில் முறையாக நடைபெற வேண்டும் என்பதை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.


மாவட்ட ஆட்சியர் வளாகத்தில்  சமூக காடு


இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், சமூக காடு அமைக்கும் பணிக்கான மரம் நடு பணி தொடங்கியது. இதற்காக முதல் மரத்தை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் நட்டு துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அரசு அதிகாரிகளும் வனத்துறை அதிகாரிகளும் மரங்களின் நட்டனர். மேலும் பள்ளி மாணவ மாணவிகளும் ஆர்வத்துடன் மரங்களை நடும் பணியில் கலந்து கொண்டனர். வேப்பமரம், புங்கை மரம், உள்ளிட்ட நாட்டு வகை மரங்கள் நடப்பட்டன.