37-வது மாவட்டமாக காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக உருவெடுத்தது. இந்தநிலையில் அச்சரப்பாக்கத்தை தலைமை இடமாகக் கொண்டு, புதிய தாலுகா ஏற்படுத்த அரசுக்கு கருத்துரு அனுப்பி 2 ஆண்டுகள் ஆகிறது. வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் அச்சரப்பாக்கம் தாலுகா அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.


மதுராந்தகம் தாலுகா


1975-ஆம் ஆண்டு, செங்கல்பட்டு தாலுகா பிரிக்கப்பட்டு மதுராந்தகத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட்டது. இந்த தாலுகாவில் 9 குறு வட்டங்கள் மற்றும் 195 வருவாய் கிராமங்கள் உள்ளன. மதுராந்தகம் தாலுகாவில் மதுராந்தகம் நகராட்சி, கருங்குழி பேரூராட்சி, அச்சரப்பாக்கம் பேரூராட்சி, மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவை உள்ளடக்கியுள்ளது.


செய்யூர் தாலுகா


1986 ஆம் ஆண்டு செய்யூர் கிராமத்தில் தலைமை இடமாகக் கொண்டு செய்யூர் தாலுகா உருவாக்கப்பட்டது. செய்யூர் தாலுகாவில் தற்பொழுது 7 குறுவட்டங்கள் மற்றும் 127 வருவாய் கிராமங்கள் உள்ளன. அதிக அளவு விவசாயிகள் மற்றும் பின் தங்கிய மக்கள் இருக்கக்கூடிய தாலுகாவில் ஒன்றாக செய்யூர் தாலுக்கா இருந்து வருகிறது. இந்த இரண்டு தாலுகாக்களிலும் மக்கள் தொகை அதிகரித்து வருவதால், புதிய தாலுக்கா பிரிக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வருகிறது. 


பொதுமக்கள் சிரமம்


குறிப்பாக மதுராந்தகம் தாலுகா அலுவலகத்திற்கு வர வேண்டும் என்றால் ஒரு சில கிராம மக்கள் 50 கிலோமீட்டர் பயணம் செய்து வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழை பெற பொதுமக்கள் தாலுகா அலுவலகம் வந்து செல்கின்றனர். இது போன்று மேல்மருவத்தூர்,  சோத்துப்பாக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் 25- கிலோமீட்டர் தூரம் உள்ள செய்யூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்று வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கால விரயம் மற்றும் பொருள் விரயம் ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்து வந்தனர்


அரசிடம் கோரிக்கை


இதனால் அச்சரப்பாக்கத்தை தலைமை இடம் கொண்டு புதிய தாலுகா அலுவலகத்தில் ஏற்படுத்த வேண்டும் என அரசிடம் தொடர்ந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன. இதனைத் தொடர்ந்து மதுராந்தகம், செய்யூர் ஆகிய இரண்டு தாலுகாக்களையும் பிரித்து அச்சரபாக்கத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்க தீர்மானிக்கப்பட்டது. இதில் அச்சரப்பாக்கம் பேரூராட்சி, அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 46 ஊராட்சிகள் மற்றும் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் 31 ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன. அச்சரப்பாக்கம் மண்டலத்தில் அச்சரப்பாக்கம் குறுவட்டத்தில் 24 கிராமங்கள், பெரும்பாக்கம் குறுவட்டத்தில் 25 கிராமங்கள், ஓரத்தில் குறுவட்டத்தில் 23 கிராமங்கள் இணைக்கப்பட உள்ளன


கருத்துரு


சித்தாமூர் மண்டலத்தில் சித்தாமூர் குறுவட்டத்தில் 27 கிராமங்கள், கயப்பாக்கம் குறுவட்டத்தில் 18 கிராமங்கள் இணைக்கப்பட உள்ளன. புதிய தாலுக்கா ஏற்படுத்த 2022 ஆம் ஆண்டு இப்பொழுது மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்திருந்தார் இதன் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. எனவே சட்டசபை கூட்டத்தொடரில் அச்சரப்பாக்கம் புதிய தாலுகா அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது


மதுராந்தகம் தாலுகாவில் என்னென்ன பகுதியில் இருக்கும் ?


தாலுகா பிரிக்கப்பட்ட பின் மதுராந்தகம் தாலுகாவில் மதுராந்தகம் காவல் நிலையம் மற்றும் படாளம் காவல் நிலையம் செயல்படும். மதுராந்தகம் நகராட்சி, கருங்குழி பேரூராட்சி , மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் 58 ஊராட்சிகள் மற்றும் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 13 ஊராட்சிகள் இணைந்து மதுராந்தகத் தாலுகாவாக இருக்கும். மதுராந்தகம் குறுவட்டத்தில் 19 கிராமங்கள், ஓணம்பாக்கம் ஒரு வட்டத்தில் உள்ள 17 கிராமங்கள், ஜமீன் எண்டத்தூர் குறு வட்டத்தில் உள்ள 11 கிராமங்கள்  கருங்குழி குறுவட்டத்தில் உள்ள 28 கிராமங்கள், எல்.எண்டத்தூர் குறுவட்டத்தில் உள்ள 23 கிராமங்கள், வையாவூர் குறுவட்டத்தில் உள்ள 27 கிராமங்கள் சேரும்.


செய்யூர் தாலுகாவில் இருக்கும் பகுதிகள் ?


புதிய தாலுகா பிரிக்கப்பட்ட பிறகு இடைக்கழிநாடு பேரூராட்சி, லத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 41 ஊராட்சிகள், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 12 ஊராட்சிகள் சேரும். சூணாம்பேடு குறுவட்டத்தில் உள்ள 14 கிராமங்கள், லத்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட 65 கிராமங்களும், கடப்பாக்கம் குறுவட்டத்தில் உள்ள 16 கிராமங்களும் சேரும். இந்த சட்டசபை கூட்டத் தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.