பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இல்லாமல், பல படங்களில் துணை கதாபாத்திரங்களாக வந்தவர்களையும் கொண்டு இயக்கப்பட்டுள்ள படம்தான் பருந்தாகுது ஊர்குருவி. இதன் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டிருந்ததால், இப்படத்தின் மீது பலருக்கும் எதிர்பார்ப்புகள் இருந்தன. அந்த எதிர்பார்ப்புகளை பருந்தாகுது ஊர்குருவி படம் நிறைவேற்றியதா? வாங்க பார்க்கலாம்.
கதையின் கரு:
ஓர் இரவு..அடர்ந்த காட்டுக்குள் ஒருவனை கொல்லத் துரத்தும் கும்பல்..அவனை காப்பாற்ற முயற்சிக்கும் நாயகன்..இறுதியில் என்ன நடந்தது? இதுதான் பருந்தாகுது ஊர்குருவி படத்தின் கதை.
சின்ன சின்ன திருட்டுகள்-அடிதடிகளை செய்து விட்டு, ‘பெட்டி கேஸ்’ அக்யூஸ்டாக ஊருக்குள் வலம் வருபவர் ஆதி (நிஷாந்த் ரூசோ). ஒரு நாள் இவர் காவல் நிலையத்தில் இருக்கும் சமயத்தில், மிளகுக்காட்டில் யாரையோ வெட்டிப் போட்டிருப்பதாக போலீஸிற்கு தகவல் வருகிறது. அந்த இடத்திற்கு வழிகாட்டச்சொல்லி, காவல் அதிகாரி போஸ் ஆதியை இழுத்துக்கொண்டு செல்கிறார். அங்கே சென்றவுடன், ஆதியின் கையுடன் பிணத்தின் கையையும் கைவிலங்கு போட்டு பூட்டிவிட்டு போன் பேசிவிட்டு வரும்வரை, பிணத்தை பார்த்துக்கொள்ளுமாறு கூறுகிறார், போலீஸ் அதிகாரி போஸ்.
ஆதி, கைவிலங்கிலிருந்து தன்னை விடுவிக்க முயற்சிக்கையில், பிணமாக கிடந்த நபருக்கு இன்னும் உயிர் இருப்பதை தெரிந்து கொள்கிறார். அப்போது, அந்த நபரின் தொலைபேசிக்கு யாரோ ஒரு பெண் போன் செய்து, அவரை காப்பாற்றுமாறு ஆதியிடம் கெஞ்சுகிறார். அந்த பெண் மூலம், உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் நபரின் பெயர் மாறன் என தெரிந்து கொள்கிறார், ஆதி. சிறிது நேரத்திற்குள் இவர்கள் இருக்கும் இடத்தை தேடி கொலைகார கும்பல் மீண்டும் வருகிறது.
அவர்களிடமிருந்து ஆதி மாறனை காப்பாற்றினாரா? மாறனை காப்பாற்றுமாறு கெஞ்சும் அந்த பெண் யார்? மாறனை அந்த கும்பல் கொல்ல முயற்சிப்பது ஏன்? போன்ற பல கேள்விகளுடன் சுவாரஸ்யமே இல்லாமல் பயணிக்கிறது திரைக்கதை.
வேகமும் இல்லை..விவேகமும் இல்லை!
படத்தின் ஆரம்ப காட்சியில் ஒரு பிணத்தையும் அதனுடன் அமர்ந்திருக்கும் நாயகனையும் அவர்களது பக்கத்தில் ஒரு பாம்பையும் காட்டி ரசிகர்களை மிரட்டிய இயக்குநர், அதே மிரட்டலை படம் முழுவதும் காட்ட முற்றிலுமாக தவறியிருக்கிறார். க்ளைமேக்ஸ் காட்சியில் ரசிகர்களுக்கு வரவேண்டிய தொய்வு, படத்தின் இரண்டு-மூன்று காட்சிகளிலேயே வந்து விடுகின்றது.
சர்வைவல்-த்ரில்லர் வகை கதையாக இருந்தாலும், அந்த ஜானருக்கு ஏற்ற வேகம் படத்தில் ஒரு இடத்தில் கூட இல்லை. எதிர்பார்ப்புகளுடன் வராத ரசிகர்கள் கூட, மொக்கையான திரைக்கதையால் மிகவும் ஏமாற்றம் அடைந்து போகின்றனர். வயிற்றில் குத்து வாங்கியும், மண்டையில் அடி வாங்கியும் ஒரு நாள் முழுவதும் சோறு தண்ணி இல்லாமல் விவேக் பிரசன்னாவின் கதாப்பாத்திரம் உயிருடன் இருப்பதை நம்ப முடியவில்லை. க்ளைமேக்சில் என்னதான் சொல்ல வருகிறார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது. ஊர் குருவிக்கு பருந்தாக மாற தெரியாவிட்டால் தெரியாவிட்டால் பரவாயில்லை..பறக்க கூட தெரியவில்லையென்றால் எப்படி?
பின்னியெடுத்த பின்னணி இசை..மிரட்டலான ஒளிப்பதிவு:
பருந்தாகுது ஊர்குருவி படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்சாக பார்க்ப்பட்டது, அதன் பின்னணி இசையும் அபரிமிதமான ஒளிப்பதிவும்தான். பச்சை பசலென இருக்கும் மலைப்பாங்கான அடர்ந்த காட்டிற்குள் சண்டை காட்சிகளையும் ஓடை காட்சிகளையும் நேர்த்தியாக படம்பிடித்திருக்கும் ஒளிப்பதிவாளர் அஷ்வின் நோவெல்லிற்கு பாராட்டுகள். படத்தின் ஒரு கண் ஒளிப்பதிவு என்றால், இன்னொறு கண்ணாக வருவது, பின்னணி இசை. க்ளைமேக்ஸ் காட்சியின்போது வரும் பாடலும், துரத்தல் காட்சியின்போது வரும் பின்னணி இசையும் செத்துக்கிடக்கும் படத்திற்கு உயிரூட்டுகின்றன.
நடிக்காத நடிகர்கள்..
‘மேயாத மான்’ பட புகழ் விவேக் பிரசன்னா, ‘ராட்சசன்’ புகழ் வினோத் சாகர் மற்றும் ஈ.ராமதாஸ் ஆகியோரைத் தவிர படத்தில் வேறு எந்த தெரிந்த முகங்களும் இல்லை. அவர்களை தவிர வேறு யாரும் படத்தில் நடிக்கவும் இல்லை. தமிழுக்கு புதிதாக வந்திறங்கியுள்ள பாலிவுட் நாயகி காயத்ரி ஐயர் ஏதோ கொஞ்சம் தேறுகிறார். கிட்டத்தட்ட படம் முழுவதும் பயணிக்கும் நாயகன் நிஷாந்த் ரூசோ, இன்னும் கொஞ்சம் கூட நடிப்பதற்கு முயற்சித்து இருக்கலாம். காயத்ரி ஐயருக்கும் விவேக் பிரசன்னாவிற்குமான காதல், கொஞ்சம் கூட மனதில் ஒட்டவில்லை. இதில், இருவரும் படுத்துக்கொண்டு கவிதை பேசும் காட்சி ரசிகர்களை முகம் சுளிக்க செய்கிறதே தவிர..ரசிக்க வைக்கவில்லை.
தியேட்டரில் போய் பார்க்கலாமா?
த்ரில்லர் படத்திற்கு அழகே அப்படம் எவ்வளவு நீளமாக இருந்தாலும், படம் பார்ப்பவர்களுக்கு நேரம் போவதே தெரியாமல் இருப்பதுதான். ஆனால் பருந்தாகுது ஊர்குருவி படமோ..அடிக்கடி கைகடிகாரத்தை பார்க்க வைக்கிறது. சுவாரஸ்யமான வகையில் திரைக்கதையை கொண்டு போய் இருந்தால், பருந்தாகிறது ஊர் குருவி திரைப்படம், பெரும்பாலனோரின் கவனத்தை ஈர்த்திருக்கும்.