சமீப காலமாக சீரிஸ் பிரியர்கள் மத்தியில் ட்ரெண்டாகிவரும் தி லாஸ்ட் ஆஃப் அஸ் தொடரைப் போல கிராஃபிக்ஸ் வீடியோ கேம் கான்செப்டை வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம்தான் டன்ஜன்ஸ் அண்ட் டிராகன்ஸ் ஹானர் அமங் தீவஸ் (Dungeons & Dragons: Honor Among Thieves). ஜானதன் கோல்ட்ஸ்டீன் மற்றும் ஜான் ஃப்ரிரான்சிஸ் டெய்லி ஆகியோர் இப்படத்தினை இயக்கியுள்ளனர். இதில், பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்களான க்ரிஸ் பைன், மிச்செல் ரோட்ருகிஸ், ஜஸ்டிஸ் ஸ்மித் மற்றும் சோஃபியா லில்லீஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களாக வருகின்றனர். சரி, அப்படி இந்த படத்தில் என்னதான் உள்ளது? தெரிந்துகொள்வோம் வாங்க.


கதையின் கரு:


கெட்ட மந்திரவாதிகளைப் பிடிக்கும் ஹார்பர்ஸ் எனப்படும் வீரர்களின் குழுவில் ஒருவராக வருகிறார், கதையின் நாயகன் எட்கின். இவர் மீது பகை கொண்ட மந்திரவாதி ஒருவன் எட்கினின் மனைவியை கொன்றுவிடுகிறான். இதையடுத்து தனது மகளுக்காக மட்டும் வாழும் தந்தையாக உருவெடுக்கிறார் எட்வின். இதற்காக தனது ஹார்பர் பணியையும் துறந்து, தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து திருட்டுத்தொழிலில் ஈடுபடுகிறார். சோஃபீனா எனும் சக்திவாய்ந்த மந்திரவாதி, ஹீரோவிடம்  ஒருவரை உயிர்தெழ செய்யக்கூடிய பொருளை திருட உதவி செய்வதாக கூறுகிறார். 




தனது மகளிடம் நிச்சயமாக திரும்ப வருவேன் என்று கூறும் அவர், திருடப்போன இடத்தில் சோஃபீனாவின் சூழ்ச்சியினால் சிக்கிக்கொள்கிறார். சிறையிலிருந்து ஹீரோ தப்பித்தாரா? அவரது மகளின் நிலை என்ன ஆனது? அந்த மந்திரவாதியின் உண்மையான நோக்கம் என்ன? போன்ற கேள்விகளுடன் நகர்கிறது திரைக்கதை.


அயர வைக்கும் முதல் பாதி..


சிறையில் கைதியாக இருக்கும் நாயகனிடமிருந்து ஆரம்பிக்கும் திரைக்கதை, அவரது ஃப்ளேஷ் பேக் காட்சிகள் முடிந்ததும் பலரையும் அசதி கொடுத்து விடுகிறது. அட்வென்சர் கதைகளில் காமெடியை புகுத்துவது ஹாலிவுட்டின் வழக்கம்தான். அப்படி ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் காமெடி டைலாக்குகள் ரசிகர்களை சிரிக்க வைக்கின்றன. படத்தில் உள்ள கதாப்பாத்திரங்கள் பெரும்பாலும் பயணம் மேற்கொள்வது போலவும் அல்லது யாரிடமாவது சண்டை போடுவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது, படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.


Also Read|Kannai Nambathey Review : 'கண்ணை நம்பாதே' நம்பி தியேட்டருக்கு போகலாமா? படம் எப்படியிருக்கு? முழு விமர்சனம் இதோ!


அளப்பரிய ஆக்ஷன்!


வழக்கமாக எல்லா படங்களிலும் ஒரு பெண் கதாப்பாத்திரமும் ஆண் கதாப்பாத்திரமும் சண்டையை எதிர்நோக்கும் வேலையில், அந்த ஆண்தான் ஈடுபடுவார். ஆனால், இந்த கதையில் அப்படியே ரோல்-ரிவர்ஸாகியுள்ளது. படத்தில் எதற்கெடுத்தாலும் கையில் வாளுடன் சண்டைக்கு நிற்பது, ஹோல்கா (மிச்செல் ரோட்ருகிஸ்) எனப்படும் கதாப்பாத்திரம்தான். அது எவ்வளவு பெரிய ராட்சத மிருகமாக இருந்தாலும் சரி, சாதாரண மனிதர்களாக இருந்தாலும் சரி, “ஒண்டிக்கு ஒண்டி சண்டைக்கு” நிற்குளார், ஹோல்கா. ஹீரோவிற்கு காமெடி காட்சிகளும் வசனங்களும் நன்றாக வர்க்-அவுட் ஆகியுள்ளன. முதல் பாதியின் ஆரம்பத்தில் அவ்வளவாக கைகொடுக்காத ஆக்ஷன் காட்சிகள், அடுத்தடுத்த காட்சிகளுக்கு வேகமெடுக்கின்றன. 




புதுமை உள்ளதா?


கேமை வைத்து எடுக்கப்பட்டுள்ள டன்ஜன்ஸ் அண்ட் டிாகன்ஸ் கதையில், தனித்துவமாக தெரிவதே இவர்கள் அந்த கதையில் காட்டடிய சிறப்பம்சங்கள்தான். அரசன் வாழும் மாளிகை, ஹாரிப்பாட்டர் படத்தை நினைவூட்டுவது போல அமைக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இறந்த பிணங்கள் எழுந்து பேசுவது, கோரமான முகத்தையுடைய மந்திரவாதிகள், நான்கு கால்கள் இருந்தாலும் இரண்டு கால்களில் நடக்கும் மிருகங்கள் என படத்தில் பல புதுமைகள் நிறைந்துள்ளன. விறுவிறுப்பான காட்சிகளில் காதுகிழிய பி.ஜி.எம் இல்லாமல் இருப்பது பெரும் நிம்மதியாக இருந்தது. 


Also Read|Agilan Movie Review: ஆழியின் அரசனாக ‘அகிலன்’..கடல் அவருக்கு கை கொடுத்ததா? கவிழ்த்துவிட்டதா? விமர்சனம் இதோ!


திரையரங்கில் பார்க்க தகுதியான படம்தானா?


உங்கள் கண்களுக்கு கிராஃபிக்ஸ் விருந்தும், மூளைக்கு ஆக்ஷன்-காமெடி விருந்தும் வேண்டும் என்று நினைத்தால், கண்டிப்பாக இப்படத்தை திரையரங்கிற்கு சென்று பார்க்கலாம். ஆனால், மிகுந்த எதிர்பார்ப்புடன் போனால் கண்டிப்பாக  ஏமாந்து போவீர்கள் என்பது நிச்சயம்.