சினிமாதான் என்றாலும் தியேட்டர் இருட்டுக்குள் சென்றதும் சினிமாத்தனங்களை மறந்து, நிகழ்கால நம் வாழ்க்கையை மறந்து வேறொரு வாழ்க்கையில் வாழ்ந்துவிட்ட அனுபவங்களைத் தருபவையே சினிமாவின் சிறந்த படைப்பாக இடம்பிடிக்கின்றன. ஒலியும் ஒளியுமாக இரண்டு மணி நேரங்கள் தியேட்டருக்குள் வாழ வைத்த எத்தனையோ படங்கள் உண்டு. இந்த திரைப்படம் ஏன் முடிந்தது? மீண்டும் நிகழ்கால வாழ்க்கையா என எண்ணவைத்த படங்களும், முடிந்துபோய் பெயர் ஓடும் நேரத்திலும் இருக்கையை விட இடம்தராமல் வெறித்துப்போய் திரையை பார்த்த படங்களும் எத்தனை. எத்தனை. அவைதான் என்றும் பூக்கும் மலராக காலத்துக்கும் நின்றுபேசும் படங்கள். அப்படியான ஒரு திரைப்படம்தான் காதலும் கடந்து போகும்.
யாழினியும், கதிரவனும் ஒவ்வொருவரின் மனதிலும் அமர்ந்துகொண்டு நாட்கணக்கில் ஆட்டிப்படைத்த மேஜிக்கை கொடுத்த திரைப்படம் இது. கொரியன் படத்தின் ரீமேக் என்றாலும் அதைக்காட்டிலும் Feel Good -ஆக ஒரு படைப்பை விருந்தாக்கிய நலன் குமாரசாமி என்றுமே மறக்கமுடியாதவர்.
இதுதான் சினிமா என்று பழக்கப்பட்ட எந்த விஷயங்களும் இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் படம் காதலும் கடந்து போகும். குடும்பத்தை மீறி சொந்தக்காலில் நிற்கத்துடிக்கும் யாழினி வெறும் நாயகியின் கதாபாத்திரம் மட்டுமே அல்ல. அறிமுகம் இல்லாத ஊரில் தனியாக களம் இறங்குவதும், வேலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, வைராக்கியத்தால் வீட்டில் பணம் வாங்காமல் பார்ட் டைம் வேலை செய்வதும் என மகளிர் தினத்தில் பலரும் எழுதிக்குவித்த ரைட்டப்புகளின் நாயகி அவள்.
நிகழ்காலத்தில் ஒரு பெண் தேவைக்காக வந்து நின்றால் அவளை இந்த சமூகத்தில் சிலர் எப்படி அணுகுகிறார்கள், வேலைக்காக அட்ஜஸ்மண்ட், இண்டர்வியூ என்ற பெயரில் கேலி கிண்டல்கள் என யாழினி பயணிக்கும் பாதை எல்லாம் படம் பேசிய பாலின பாகுபாடு. இந்த ஆண்களே இப்படித்தான் என்று பொத்தாம் பொதுவாக முத்திரை குத்தமுடியாது என்று திரையில் வந்து நிற்பார் விஜய் சேதுபதி. படத்தின் நாயகன் கதிரவன்.
இயல்பாக இருப்பதே கதிரவனின் இயல்பு. பக்கத்து வீட்டில் அழகான பெண் என்றாலும் முதல் சந்திப்பிலேயே ஒரண்டை இழுப்பது, பத்தோடு பதினொன்றாகவே அவரை டீல் செய்வது, சில பில்டப் கொடுக்க நினைத்தாலும் எளிதாக மொக்கை வாங்கிக்கொண்டு நிற்பது என பார்ப்பதற்கு ஆள் முரடு என்றாலும் கதிரவனிடம் ஒரு பாதுகாப்பை அறிமுகமே இல்லாத யாழினி உணர்வாள்.
அந்த உணர்வை நமக்குள்ளும் கொஞ்சம் கொஞ்சமாகவே கடத்தி வைப்பார் இயக்குநர். இந்த நட்பா, உறவா, காதலா என பார்வையாளர்களை குழப்பிக்கொண்டே சென்றாலும் கதிரவனும், யாழினியும் நமக்கு ஒரு உறவாகவே ஆகிவிடுவார்கள். திக்குதெரியாத ஊரில் வேலைகிடைக்காத விரக்தியில் இருக்கும் நாயகி பேருந்தில் இருந்து இறங்கி வந்து தெருவில் போஸ்டர் ஒட்டிக்கொண்டிருக்கும் கதிரவனிடம் ''பசிக்குது. சாப்பிடலாமா'' என்று கேட்கும் காட்சி, யாழினி கதிரவன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை பார்வையாளர்களுக்கு கடத்தும். நாம் எல்லாருக்குமே அப்படியான ஒரு தோள் இருந்திருக்கும், இருக்கலாம். திருட வேண்டான்னு சொல்லு, கடைக்கு வராதனு சொல்லாத.. எங்க ஏரியாவ்ல கடையை வச்சிட்டு எங்களையே வர வேண்டான்னு சொல்வியா என சூப்பர் மார்கெட்டில் கதிரவன் எகிறுவதும், வெளியே வந்து திருடிய சிறுவர்களை கண்டித்து அனுப்புவதும் கூஸ்பம்ஸ் மொமண்ட். உலக அரசியலில் பூர்வக்குடிகள் சந்தித்த துரோகத்தை, ஏமாற்றத்தை ஒரு ப்ளாஷாக அந்தக்காட்சி கடத்திவிட்டு போகும்.
ஏதேதோ பேசிச்சிரித்து, அத்தனை இணக்கமாய் உணர்ந்து நடு இரவில் தூங்கிவிட்ட நேரத்தில் சத்தம் செய்யாமல் எழுந்து செல்லும் சக பேருந்து அல்லது ரயில் பயணியை போல நம் வாழ்விலும் எத்தனையோ பேரை கடந்து வந்திருக்கிறோம். ஒரு நிலைக்கு வந்துவிடக்கூடாத என்று தவித்து நின்ற காலத்தில் எல்லாம் அருகே நின்று தோள் கொடுத்த ஏதோ ஒரு உறவு வாழ்ந்துகாட்டும் நேரத்தில் அருகே இல்லாமல் இருப்பது எத்தனை பெரிய வலி. அப்பா, அம்மா, மனைவி, கணவன் என எல்லாருக்கும் யாரோ இருந்திருப்பார்கள்தானே.
நாம் சிரித்துக்கொண்டும், பேசிக்கொண்டும் நம் அருகே எத்தனையோ பேர் இருந்தாலும் அருகேயில்லாத அந்த நபரை கண்கள் தேடிக்கொண்டேதானே இருக்கிறது. அந்த உணர்வை யாழினி மூலம் நமக்குள் கடத்திவிடுவதே காதலும் கடந்து போ படத்தின் வெற்றி. எப்படியாவது யாழினியும், கதிரவனும் சந்தித்துவிட வேண்டும் என ஒவ்வொரு பார்வையாளனையும் உருவ வைத்ததே நலனின் முழு வெற்றி.
பெய்யென பெய்யும் மழை நேரத்தில் தான் தேடிய உறவை நேர்கொண்டு பார்த்து பேச வார்த்தையின்றி சிரிப்பால் மகிழத் தொடங்கும் யாழினி நமக்குள் ஒரு சாரலாய் இறங்குவார். எந்த டயலாக்குமே இல்லாமல் அழகான பிஜிஎம் உடன் முடியும் அந்த க்ளைமேக்ஸூக்கு என்றுமே தனி ரசிகர்கள் உண்டு.