Koogle Kuttappa Review in Tamil: அறிவியல்பூர்வமான திரைப்படங்கள், தமிழில் அரிதாக வரும். அவற்றில் பிரம்மாண்டம் இருக்கும்; அதற்கு ஏற்ப இல்லாவிட்டாலும் ஏதோ என்கிற அளவிற்கு வெற்றி கிடைக்கும். நாளை வெளியாக இருக்கும் கூகுள் குட்டப்பா... பிரம்மாண்ட படமா என்று கேட்டால்... இல்லை! வெற்றி படமா... என்று கேட்டால்... அதற்கு கடைசியில் பதில் சொல்வோம், வாங்க... இப்போ படத்திற்குள் போவோம்...


கோவை மாவட்டத்தில் தந்தையின் பிள்ளையாக வளரும் ரோபோடிக் இன்ஜினியர் இளைஞருக்கு, வெளிநாடு செல்ல ஆசை. அவரது தந்தை அதற்கு நேர்மாறானவர். இயற்கையோடு ஒட்டி வாழ விரும்புபவர். அவரை சமாதானப்படுத்தி, ஜெர்மன் செல்லும் மகன், தனிமையில் இருக்கும் தந்தையை கவனிக்க, தனது நிறுவனத்தால் பரிசோதனையில் இருக்கும் ஒரு ரோபோவை அவருக்கு தருகிறார். துவக்கத்தில் அதை வெறுக்கும் முதியவர், பின்னர், ரோபோவின் அன்பில் ஆழ்ந்து, அதையே மகனாக பாவிக்கிறார். 


பரிசோதனை முடிந்து ரோபோவை கேட்கிறார் நிறுவன முதலாளி. தர மறுக்கிறார் தந்தை. மீட்க இந்தியா வருகிறார் மகன். ரோபோ என்ன ஆனது? தந்தை விருப்பம் என்ன ஆனது? இது தான் கூகுள் குட்டப்பா. ஐந்து வரியில் இந்த படத்தின் கதையை கூற முடிகிறது. ஆனால், அதை இரண்டரை மணி நேரத்திற்கு எடுத்து வர, இயக்குனர் எடுத்த முயற்சிகள் பெரிய அளவில் ஜெயிக்கவில்லை. முதல் பாதி எங்கெல்லாமே அலைந்து திரிந்து கதைக்கு வரும் போது, இடைவெளி வந்து விடுகிறது. 




ரோபோ என்று வரும் போது, அதனுடைய பெரிய அளவிலான பங்களிப்பை காட்சியாக்கவில்லை. சுஃவிகி, ஜோமாட்டோ இருந்தாலே சமாளித்துவிடலாம் என்கிற ரீதியிலான காலத்தில், சமைக்க, சாம்பல் அள்ள ரோபோ போதும் என்பதெல்லாம், தேவர் ப்லிம்ஸ் காலத்து கதையாகவே தெரிகிறது. தந்தையாக கே.எஸ்.ரவிக்குமார், எந்த இடத்திலும் குறை சொல்ல முடியாத நடிப்பு. அதே நேரத்தில் மகனாக வரும் பிக்பாஸ் தர்ஷனின் நடிப்பை, எங்கும் குறை சொல்லலாம். நடிப்பு கிலோ எவ்வளவு என்பது மாதிரி தான், அவரது பங்கு இருக்கிறது. நடிப்பில் தான் பங்கு இல்லை என்றால், படத்திலும் பெரிய அளவில் அவருக்கு பங்கில்லை. பங்கில்லாத அவருக்கு, இன்னொரு பங்கு இல்லாத நாயகியாக பிக்பாஸ் லாஸ்லியா! ஆனால், அவர் நடிப்பில் பாஸ் ஆகிறார். 


யோகி பாபு, பிளாக் பாண்டி, பூவையார் என சிரிப்பை வரவழைக்க எத்தனையோ பேர் இருந்தும், சிரிப்பு என்னவோ கடைசி வரை வரவில்லை. ஆனால், கே.எஸ்.ரவிக்குமார்-ரோபோ காம்பினேஷன் கொஞ்சம் ஆறுதல். ஃப்ராங் ஸ்டார் ராகுல், சீரியஸ் ஸ்டார் ராகுலாக பார்க்க கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கிறது. சிரிக்க வைப்பவர்கள் சீரியஸாக தெரிந்தால், படத்தில் யார் தான் சிரிக்க வைப்பது? பாகுபலி கட்டப்பாவை விட குட்டப்பாவை கொண்டாடுகிறது கிராமம். இணைய வசதி இல்லாத ஒரு குக்கிராமத்தில் ஃபுல் பார்மில் இருக்கும் குட்டப்பாவை நியாயப்படுத்த... இத்தனை செட்டப்பா? ஆனால் எல்லாமே ஒரு மொட்டப்பா மாறிப்போனது தான் சோகத்திலும் சோகம். அதிலும் பெருஞ்சோகம் க்ளைமாக்ஸ். இப்படி ஒரு க்ளைமாக்ஸை தமிழ் சினிமா இது வரை பார்த்ததில்லை; இனி பார்க்கப் போவதும் இல்லை. என்ன க்ளைமாக்ஸ் என கேட்காதீர்கள்! கொஞ்சம் ஆறுதல்படத்தான் வேண்டும்.


கதைக்குள் நேராக வராமல், கதாபாத்திரங்களை அறிய வைக்க எடுத்துக் கொண்ட நேரமும், கலகலப்பை குறைத்து, செண்டிமெண்ட் ஏற்றுவதாக நினைத்து, பொறுமையை சோதித்ததும் தான் படத்தின் மிகப்பெரிய குறை. கே.எஸ்.ரவிக்குமார் மாதிரியான லெஜண்ட் இயக்குனர் தயாரிக்கும் படத்தில் இந்த குறை, கொஞ்சம் ஏமாற்றம் தான். ஒரே ஆளாக, கே.எஸ்., மட்டுமே படத்தை சுமக்கிறார். அவருக்கு ஒருவர் கூட தோல் கொடுக்கவில்லை; சில இடங்களில் ரோபோவை தவிர. 


ஜிப்ரானின் இசையில் பின்னணி மிகச்சிறப்பு. ஓரிரு பாடல்கள் கேட்கும் ரகம். மற்றபடி, கதைக்கு பொறுமை இழக்கும் போது, பாடலை அமர்ந்து கேட்க யாருக்கு மனம் வரும். மலையாளத்தில் வந்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பனை அப்படி எடுத்திருந்தால் கூட கொஞ்சம் ஆறுதலாக இருந்திருக்கும். இயக்குனர் சபரி சரவணன், இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்க வேண்டும். அருவியின் ஒளிப்பதிவு தான், கண்ணும் குளிர்ச்சியாக இருந்தது. எடிட்டர் பிரவீன் ஆண்டனியையோ, இன்னும் பிற தொழில்நுட்ப கலைஞர்களையோ இதில் குறை சொல்ல ஏதும் இல்லை. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். 


கூகுள் இல்லாத மனிதனே இல்லை... அப்படி இருக்கும் போது, குறைகள் இல்லாத கூகுள் குட்டப்பாவை அல்லவா தந்திருக்க வேண்டும். அங்கு தான், தடம் பிரண்டுள்ளனர். குட்டப்பாவிற்கு குட்லக் சொல்ல முடியாத நிலை!


Also Read | Visithiran Review: ஜோஜு ஜார்ஜூவிடம் ஆர்.கே.சுரேஷ் தோற்றாரா ஜெயித்தாரா.. விசித்திரன் படம் எப்படி இருக்கு.. - விமர்சனம்..!