Visithiran Review in Tamil: மலையாளத்தில் ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் கவனம் பெற்ற படம் ‘ஜோசப்’. இந்தப்படத்தின் தமிழ் ரீமேக்தான் ஆர்.கே. சுரேஷ் நடிப்பில் பாலா தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ‘விசித்திரன்’. மலையாளத்தில் ஜோசப்பை இயக்கிய பத்மகுமாரே தமிழில் விசித்திரனையும் இயக்கி இருக்கிறார். பூர்ணா மதுஷாலினி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருக்கிறார். 


 


                                                                     


கதையின் கரு


முன்னாள் காதலியின் இறப்பை கண்முன்னே காணும் போலீஸ் அதிகாரி மாயன் ( ஆர்.கே.சுரேஷ்)  அதையே நினைத்து சகா காலமும் சோகத்திலேயே  மூழ்கிகிடக்க இனி முடியாது என மாயனின் மனைவியான ஸ்டெல்லா (பூர்ணா) விவாகரத்து வாங்கிக்கொண்டு பிரிந்து செல்கிறார். இவர்களுக்கு பிறந்த மகள் ஆர்.கே.சுரேஷிடம் வளர்ந்து வந்த நிலையில், விபத்து ஒன்றில் மகள் இறந்து விட, சில வருடங்களில் அதே பாணியில் மனைவி ஸ்டெல்லாவும் உயிரிழக்கிறார்.



                                                                 


இந்த இரண்டு உயிரிழப்புகளும் மாயனின் மாயக் கண்களுக்கு திட்டமிடப்பட்ட கொலைகள் எனத் தெரிய வர அந்த கொலைகளுக்கு காரணம் யார்? எதற்காக அவை நடந்தன? அவற்றை மாயன் எப்படி துப்பு துலக்குகிறார் என்பதே மீதிக்கதை.. 


நல்ல உழைப்பு 


மலையாளத்தில் ஜோஜூ ஜார்ஜின் நடிப்புக்கு நேஷனல் அவார்டு வாங்கித்தந்த கதாபாத்திரம். கம்பேரிசன் கட்டாயம் இருக்கும் என தெரிந்தே அதை சவாலாக எடுத்துக்கொண்டு நடித்திருக்கிறார் ஆர்.கே.சுரேஷ். படத்தில் அவருக்கு 3 வேரியேஷன்ஸ். அதனை திரையில் தத்ரூபமாக காட்சிப்படுத்த உடலை வருத்தி உழைத்த ஆர்.கே.சுரேஷிற்கு பாராட்டுகள்.



                                                           


 


நடிப்பிலும் அடுத்தக்கட்டம் சென்றிருக்கிறார். தொந்தியும் தண்ணியுமாக அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்கள், மனையிடம் உருகும் காட்சிகள் என எல்லாவற்றிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். மாயனின் காதலியாக வரும் மதுஷாலினி கொஞ்சம் நேரம் வந்தாலும் மனதில் நிற்கிறார். மனைவியாக வரும் பூர்ணாவும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்திருக்கிறார். அத்துடன் மாயனின் நண்பர்களாக வரும் இளவரசு உள்ளிட்ட நண்பர்கள் கதாபாத்திர வடிவமைப்பு சிறப்பு. 


ஏமாற்றங்கள்


மலையாளத்தில் காட்சிக்கு காட்சிக்கு அடுத்து என்ன நடக்கும் என சீட்டின் நுனியில் அமரவைத்த இயக்குநர் பத்மகுமார் இதில் கொஞ்சம் அதை தவறவிட்டிருக்கிறார். தமிழுக்காக திரைக்கதையில் சில மாற்றங்களை செய்த போதும் அவை எதுவும் பெரிதாக வொர்க் அவுட் ஆகவில்லை.


ஸ்டார்களுக்கு மட்டும்தான் மெனக்கெடல்கள் வருமோ..?


மிகப் பெரிய ஏமாற்றம்.. ஜி.வி.பிரகாஷ்குமார். ஒரு பாடலில் கூட ஜிவியின் முத்திரை இல்லை.. பின்னணி இசையிலும் பெரிதான மெனக்கெடல் இல்லை... அதுவே படத்திற்கு மிகப் பெரிய மைனஸாக அமைந்து விட்டது. ஏன் பெரிய ஸ்டார்களின் படங்களுக்கு மட்டும்தான் உயிரை கொடுத்து வேலை செய்வீர்களா என்ன என்ற கேள்வி எழுகிறது. வெற்றிவேல் மகேந்திரனின் கேமாரா எல்லா இடங்களிலும் கனகச்சிதமாக காட்சிகளை படம்பிடித்திருக்கிறது. இறுதியாக கொலைக்கான காரணியாக இருக்கும் காரணங்கள் மருத்துவ மாஃபியா மீதான அச்சத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது. ஆர்.கே.சுரேஷ் கொடுத்த உழைப்பை பிறரும் கொடுத்திருந்தால் நிச்சயம் விசித்திரன் இன்னும் ரசிக்கப்பட்டிருப்பான்.. 


Also Read | Koogle Kuttappa Review: கூகுள் குட்டப்பா... செட்டப்பா... கெட்டப்பா...? உள்ளதை உள்ளபடி கூறும் விமர்சனம்!