மழை என்றாலே அதனை ரசிக்காத மக்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மழைப்பொழியும் நேரத்தில் டீயுடன் மொறு மொறுவென்று ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிடுவது என்பது அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் மற்ற பருவநிலைப்போல் இல்லாமல் மழைக்காலங்களில் தான் உணவு முறைகளை சரியாகப் பின்பற்ற வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். குளிர்ச்சியான சூழல் நிலவும் போது நம்மை அறியாமலேயே நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையக்கூடும். இதனால் தேவையில்லாத பிரச்சனைகளைப் பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும் என்பதால் மழைக்காலத்திற்கு ஏற்ற உணவுகள் என்ன என்பது குறித்து நாமும் இங்கே தெரிந்துக்கொள்வோம்.



  •  


மழைக்காலத்திற்கு ஏற்ற உணவுமுறைகள்:


மழைக்காலம் ஆரம்பித்தாலே பலருக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்றவை அனைவருக்கும் ஏற்படும். குறிப்பாக ஆஸ்துமா நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதோடு மட்டுமின்றி மழைக்காலத்தில் வயதானவர்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கும். எனவே இதுப்போன்ற நேரங்களில் குளிர்ந்த உணவுகளைத்தவிர்த்து சூடான உணவுகளைச் சாப்பிடுவதை நாம் வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். மேலும் வழக்கமான டீ, காபி போன்றவற்றைத்தவிர்த்து கசாயம் போன்றவற்றை நாம் சேர்த்துக்கொள்வது பலனளிக்கும். குறிப்பாக ஆடா தொடா இலையுடன் மிளகு, தூதுவளை, பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம்.


இதேப்போன்று கற்பூரவல்லி இலை அல்லது துளசி இலைகளுடன் மிளகு, வெற்றிலை சேர்த்து கொதிக்க வைத்து பருகினால் சளி போன்ற பிரச்சனைகள் மழைக்காலங்களில் ஏற்படாது.


மேலும் மழைக்காலங்களில் ஏற்படும் காய்ச்சலிருந்து பாதுகாக்க நில வேம்பு கசாயம் பருகுவது மிகுந்த பலனளிக்கும்.





 பழங்கள்:  பருவகாலங்களில் அதிகளவில் கிடைக்கும் பிளம்ஸ், செர்ரி, மாதுளை போன்ற பழங்களில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, நார்ச்சத்து அதிகளவில் நிரம்பியுள்ளதால் இதனை சாப்பி்டுவது நல்லது. குறிப்பாக மழைக்காலங்களில் கடைகளில் விற்பனையாகும் வெட்டப்பட்ட பழங்கள் மற்றும் பழச்சாறுகள் வாங்கி உண்பதைத் தவிர்த்து வீடுகளிலேயே பழச்சாறு பருகலாம்..


சூப் வகைகள்:  காய்கறி சூப், காளான் சூப் போன்றவற்றை தினமும் சூடாக பருகினால் உடலுக்கு நன்மைப்பயக்கும். அதில் மறக்காமல் மிளகு சேர்த்துக்கொள்வது கூடுதல் நன்மை பயக்கும்.


மழைக்காலத்தில் இனிப்புகளை அதிகம் பயன்படுத்த வேண்டாம். பால் , தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றை அதிகம் சாப்பிடக்கூடாது. ஆனால் மோர் சாப்பிடலாம். மேலும் காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை மழைக்காலத்தில் அதிகம் சேர்த்துக்கொள்வது நன்மை பயக்கும். காலை மற்றும் மதிய வேளைகளில் உணவின் போது தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம்.


உணவுகள் இஞ்சி,பூண்டு போன்றவற்றை அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் சேனைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


குறிப்பாக மழைக்காலத்தில் வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகள் அதிகம் பரவ வாய்ப்புள்ளதால் வெளியில் சாப்பிடுவதைத்தவிர்க்க வேண்டும். முடிந்தவரை வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது  நன்மை பயக்கும்.


.