பயணிகள் வந்தே பாரத் ரயில்களுக்கு பயண சீட்டு பதிவு செய்யும்போது அசைவ உணவை தேர்ந்தெடுக்கலாம்.

வந்தே பாரத் ரயில்
 
இந்திய ரயில்வே தனது தோற்றத்தையும், அணுகுமுறையையும் முற்றிலும் மேம்படுத்தி வருகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் போன்ற நவீன மற்றும் விரைவு ரயில் சேவையை தொடங்கியுள்ளது மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான ரயில் நிலையங்களை புதுப்பிக்கும் திட்டமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தவிர பொதுமக்களின் வசதிக்காக அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வந்தே பாரத் ரயில்களில் பல அப்டேட்கள் கொண்டு வரப்பட்டு வருகிறது.
 
அசைவ உணவை தேர்வு செய்யலாம்
 
இந்நிலையில் வந்தே பாரத் ரயில்களில் அசைவ சிற்றுண்டி வழங்கப்படுவதில்லை என சில ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளதை அடுத்து, இது தொடர்பாக தெற்கு ரயில்வே முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். அதில் ”வந்தே பாரத் ரயில்களில் அசைவ சிற்றுண்டி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. தெற்கு ரயில்வே பகுதியில் இயக்கப்படும் 7 வந்தே பாரத் ரயில்களில் மே 30 அன்று 603 அசைவ சிற்றுண்டிகள் பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதேபோல மே 31 அன்று 6 வந்தே பாரத் ரயில்களில் 1302 பயணிகளுக்கு அசைவ சிற்றுண்டி வழங்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் வந்தே பாரத் ரயில்களுக்கு பயண சீட்டு பதிவு செய்யும்போது அசைவ உணவை தொடர்ந்து தேர்ந்தெடுக்கலாம்” என தெரிவித்துள்ளார்.