’ மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம்’
- இளங்கோ அடிகள், புகார்க்காண்டம், சிலப்பதிகாரம்


’எலந்தப்பழம் எலந்தப்பழம எலந்தப்பழம்’
-கவியரசர் கண்ணதாசன், பணமா? பாசமா?

‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்


அவன் மாம்பழம் வேண்டுமென்றான்’


-வாலி, எங்கள் வீட்டுப்பிள்ளை


’பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்


அடடா பிரம்மன் கஞ்சனடி


சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்


ஆஹா அவனே வள்ளலடி’
- வைரமுத்து, ஜீன்ஸ்





இப்படி இரண்டாம் நூற்றாண்டு தொடங்கி இளங்கோவடிகள்,கவியரசர்கள், கவிப்பேரரசர்கள் என ஆண்கள் மாவென்றும் மலையென்றும் இரட்டை அர்த்தங்களில் பெண்ணுறுப்புகளைப் பற்றி எழுதிய சுதந்திரமும் உரிமையும் கூட, பெண்களுக்கு மிஞ்சிப்போனால் சில கிராம்கள் எடையுள்ள அவர்களது அந்தரங்க உறுப்புகள் மீது இருந்ததில்லை.இரட்டை அர்த்தச் சொற்கள் தவறாகப் படாத சமூகத்துக்கு மார்பகம், முலையென்று சொல்லுவதே பாவமாக இருக்கிறது. 


உண்மையில் மார்பகமும் யோனியும் எனப் பெண்ணுறுப்புகளை அவளுக்கான தண்டனையாகத்தான் அணுகியிருக்கிறது இந்தச் சமூகம். அக்கினி வெயில் முடிந்தபின்பும் கோடை ஒருபக்கம் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கம் வீட்டு வேலைகளுக்கு எனப் பெண்கள் நேர்ந்துவிடப்பட்டதை கொரோனா ஊரடங்கு மேலும் உறுதிசெய்துவிட்ட காலம் இது. ’முன்னயாச்சும் கொஞ்சம் வெளியே போவோம் வருவோம்.இப்பல்லாம் 24 மணிநேரமும் வீட்டுவேலை செய்வது மாதிரியே இருக்கு.வியர்வைக்கு உள்ள போட்டுருக்கறதை எல்லாம் கழட்டிட்டு அக்கடான்னு உக்காரலாம்னா இந்த வீட்டு ஆம்பிளைங்களுக்கு நடுவுல எங்க முடியுது?’ எனப் புலம்புகிறாள் உழைப்பாளி ஒருத்தி.  

தோள்பட்டையோரமும் மார்பகத்துக்குக் கீழும் என உள்ளாடைகள் படும் இடமெல்லாம் வெப்பத்தால் தோல்வழண்டு கிடக்கிறது அவளுக்கு. ஆனால் அவளால் வீட்டில் ஒரு ஆண் அரை நிர்வாணமாக மேலாடையைக் கழற்றிவிட்டு மின்விசிறிக் காற்றில் அமர்வது போல அமரமுடியாது. அவள் ஏங்குவது போல உள்ளாடைகளைக் கழற்றிவிட்டு அமரலாம் என்றால் அவளது நடத்தை வரைக் கேள்விக்குறியாக்கப்படும்.  மாடுகளுக்குச் சூடு போடுவது போலத்தான் பெண்களுக்கு உள்ளாடைகள் என்பது.




ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்துக்கு முன்பு இந்தியச் சமூகத்தின் பெண்கள் இப்படியாக இருந்ததில்லை என்கின்றன நமக்குக் கிடைக்கும் புகைப்படத் தரவுகள். மிஞ்சிப்போனால் மேலோடு ஒரு முண்டு ஒன்றைப் போர்த்தியிருந்தாள் அவள். சமணர் மற்றும் பௌத்தப் பெண் துறவிகள் அதே முண்டை முற்றிலுமாகப் போர்த்தியிருந்தார்கள். முகலாயர்கள் காலத்தில் மார்பகங்களோடு ஒட்டிய ப்ளவுஸ் வகைச் சட்டைகள் மட்டும் புழக்கத்தில் இருந்தன.




இந்தியப் பெண்கள் மேல் சட்டையுடன் கூடிய ஆடை உடுத்தும் வழக்கத்தை அறிமுகப்படுத்தியது வங்காளக் கவி ரவீந்திரநாத் தாகூரின் குடும்பம்.அவரது அண்ணனும் இந்தியாவின் முதல் அரசு அதிகாரியுமான சத்தியேந்திரநாத் தாகூரின் மனைவி ஞானநந்தினிதான். ஒரு அரசு அதிகாரியின் மனைவியாக ஆங்கிலேயக் குடும்பங்களுடன் அடிக்கடி நட்புபாராட்டும் அவசியம் ஞானநந்தினிக்கு இருந்தது. ஆனால் ஒரு பெண் ஆங்கிலேயர்களுடன் நட்புபாராட்டுவதை அவரது குடும்பம் எதிர்த்தது. அதையும் மீறி சத்தியேந்திரநாத் கொடுத்த ஊக்கத்தில் ஆங்கிலேய அதிகாரிகள் வீட்டுப் பெண்களைத் தேநீர் விருந்துகளில் சந்திக்கச் சென்றார் நந்தினி.  கழுத்துக்குக் கீழ் கால்நகம் கூடத் தெரியாத அளவுக்கு மறைத்துப் பெரியதாக உடை உடுத்திய ஆங்கிலேயப் பெண்களுக்கு நடுவே உள்சட்டை ப்ரா என எதுவுமே இல்லாமல் வெறும் வெள்ளை முண்டு உடுத்திச் சென்ற ஞானநந்தினி வேறானவராகத் தெரிந்தார். கவுன் அணிந்த ஆங்கிலப் பெண்களுக்கு நடுவே தானும் நம்பிக்கையோடு நடமாட உள்சட்டையுடன் கூடிய முண்டை உடுத்தத் தொடங்கினார்.

இப்படித்தான் 19ம் நூற்றாண்டில் உள்ளாடைகள்  ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியாவில் அறிமுகமானது. ’ப்ரா’ என்கிற உள்ளாடையை தங்களது தன்னம்பிக்கை என இந்தியப் பெண்கள் நம்பத் தொடங்கியதும் அப்போதிலிருந்துதான். இப்படித்தான் இந்தியப் பெண்களின் தன்னம்பிக்கை மேற்கத்திய நாகரிகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இந்த தன்னம்பிக்கைதான் பிற்காலத்தில் மாட்டுக்கு இட்ட சூடாகவும் மாறிப்போனது.




ஒருபக்கம் நம்மூர் கவிப்பேரரசர்கள்,

‘சுட்டப்பால் போல தேகம்தாண்டி உனக்கு


அதில் பாலாடை மட்டும் கொஞ்சம் விலக்கு’


என வரலாறு தெரியாமல் கன்னாபின்னா ரகக் கவிதைகள் எழுதிக்கொண்டிருக்க உண்மையில் இந்தப் பாலாடை (அ) ப்ரா என்பது பெண்களின் அவர்களது உடல்மீதான உரிமையின் பரிணாம வளர்ச்சியாக இருந்திருக்கிறது.அதன்பின் பன்னெடுங்காலப் போராட்டமும் இருந்திருக்கிறது. அதை அறிந்துகொள்வது என்பது அவள் உடல்மீதான உரிமையை விவாதிப்பது. பெண்ணுக்கு, தன் உடல்மீதான உரிமைதான் முதன்மையானது. மற்ற உரிமைகள் அதற்குப் பிறகுதான். விவாதிப்போம்!

(தொடரும்…)

Also Read: நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாக பெற வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க!