இந்திய நாடு குடியரசு நாடக அறிவித்த பிறகு காங்கிரஸ் கட்சி சாராத தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர் என்ற பெருமைக்குரியவர் முன்னாள் முதல் அமைச்சர் C N அண்ணாதுரை. செப்டம்பர் மாதம் 1909-ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் பிறந்த அண்ணா, 1969-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி  தனது 59-வது வயதில் புற்று நோயின் தீவிரத்தால் உயிர் இழந்தார் .




சட்டமன்ற மேலவை உறுப்பினர் , மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் முதல் அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்த அண்ணாவின் இறுதிச்சடங்கு அடுத்த நாள் சென்னையில் நடைபெற்றது. அவரது இறுதி ஊர்வலத்தில் 1 .5  கோடிக்கும் அதிகமான பொது மக்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வு கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. வரலாற்றில் மிக முக்கிய இடத்தை பிடித்திருக்கும் அண்ணாவின் வாழ்க்கை, அண்ணா மறைந்த சில நாட்களுக்கு பிறகு அவரது உடல் அடக்கம்  செய்யப்பட்டுள்ள மெரினா கடற்கரையில் ஒரு 40 வயது மதிக்கத்தக்க  வட நாட்டு இந்தியர் ஒருவர் அண்ணாவின் கல்லறையில் கண்ணீர் விட்டு அழுவதை பொது மக்கள் மூலம் பத்திரிகையாளர்களுக்கு  தெரியவந்தது. சிறிதுநேரம் கழித்து அவர் அண்ணா சமாதியில் இருந்து வெளியே வந்தபொழுது, பத்திரிகையாளர்கள் அவர் யார் என்று விசாரிக்கின்றனர் .


அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பேச தொடங்கிய அந்த வட நாட்டு மனிதர் , தனது பெயர் மோகன் ரானடே என்பதும் கோவா மாநிலம் அப்பொழுது போர்ச்சுகல் பேரரசு கட்டுப்பாட்டில் இருந்தபொழுது அதன் விடுதலைக்காக கோவா விடுதலை இயக்கத்தில் இணைந்து மாபெரும் போராட்டங்களை முன்னின்று நடத்திய மோகன் ரானடே நான்தான் என்பதை தெரிவித்தார்  .




அவருடைய போராட்டங்களை பற்றி விரிவாக பேச ஆரம்பித்த மோகன் ரானடே கோவா விடுதலை போராட்டத்துக்காக  1955-ஆம் ஆண்டு ஆயுதங்களை சேகரிக்க கோவாவில் உள்ள பெட்டிம் காவல் நிலையத்தை வெறும் மூங்கில் கட்டைகளை கொண்டு தாக்கியபொழுது , அவர்களது முயற்சி தோல்வி அடைந்து மோகன் ரானடே  போர்ச்சுகல் நாட்டுக்கு நாடு கடத்தப்பட்ட 14 வருட சிறைவாசத்துக்கு பிறகு சில மாதங்களுக்கு முன்புதான் விடுதலை அடைந்து இந்தியா திரும்பியதாகவும் தன்னுடைய விடுதலைக்கு பெரும் பங்கு வகித்த அண்ணாவின் மறைவு செய்தி தெரிந்து அவருக்கு அஞ்சலி செலுத்த வந்துள்ளதாகவும் தெரிவித்தார் .


யார் இந்த மோகன் ரானடே :


1930-ஆம் வருடம் மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலியில் பிறந்தவர் மோகன் ரானடே, வலது சாரி கொள்கைகளின் மீது பெரும் நாட்டம்கொண்டு இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காக போராடி வந்த விநாயக் தாமோதர் சாவர்க்கருடைய சிந்தனைகளால் கவரப்பட்ட இவர் , தனது இயற்பெயரான 'மனோகர் அப்டே' என்பதை மோகன் ரானடே என்று மாற்றி  கொண்டுள்ளார்  .




போர்ச்சுகல் கொடுங்கோல் ஆட்சியால் அடிமைத்தனத்தில் இருந்து கோவா மக்களை காப்பாற்ற , தனது 17 ஆம் வயதில் கோவா சுதந்திர போராட்ட குழுவில் இனைய முயற்சிகள் மேற்கொண்டு வந்த இவர் 1947-ஆம் ஆண்டு பள்ளி ஆசிரியர் என்ற போர்வையில் கோவாக்குள் நுழைந்தார். 'ஆசாத் கோமந்தக் தளம்' என்ற அமைப்பில் இணைந்து ஆயுத போராட்டத்திற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். 300  ரூபாய்க்கு தான் வாங்கிய ஒரு கை துப்பாக்கியை கொண்டு ஆயுத பயிற்சியில் ஈடுபட்டுவந்த ஆசாத் கோமந்தக் தளம் அமைப்பினருக்கு அப்பொழுது போர்ச்சுகல் பேரரசு கட்டுப்பாட்டில் இருந்து கோவா, தாமன் மற்றும் டையூ பகுதிகளை மீட்க அவர்களுக்கு அதிகளவில் ஆயுதங்கள் தேவைப்பட்டது .


1955-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ஆம் தேதி , ஆயுதங்களுக்காக பெட்டிம் காவல் நிலையத்தை வெறும் மூங்கில் கட்டைகளை கொண்டு  கைப்பற்ற  முயன்ற போது அவர்களுடைய முயற்சி தோல்வியில் முடிந்தது. போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த மோகன் ரானடே போலீசாரால் சுத்தி வளைக்கப்பட்டு கைதும் செய்யப்பட்டார். தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக அவரை 5 வருடம் தனி சிறையில் வைத்து சித்ரவதை செய்த  போர்ச்சுக்கல்  அரசு 1960-ஆம் ஆண்டு அவர் மீது போர்க்குற்றங்களை சுமத்தி 26 வருட சிறைத்தண்டனை விதித்து அவரை போர்ச்சுகல்  நாட்டுக்கு நாடு கடத்தி அங்கு லிஸ்பன் சிறையில் அடைத்தது .




இந்தியா சுதந்திரம் அடைந்த 14 வருடங்கள் கழித்து 1961  ஆம் ஆண்டு கோவா சுதந்திரம் அடைந்திருந்தாலும் , மோகன் ரானடேவின் விடுதலை ஒரு கேள்வி குறியாகவே இருந்தது. முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பேயி உற்பட பல வலதுசாரி தலைவர்கள் அவர் விடுதலைக்காக உலக நாடுகளின் ஆதரவு வேண்டி குரல் கொடுத்திருந்தாலும் மோகன் ரானடே சுதந்திர போராட்டத்தை பற்றி கேள்விப்பட்ட , அண்ணாதுரை அவர்கள் , 1967-ஆம் ஆண்டு தனது அமெரிக்க நாட்டு சுற்று பிரயாணத்தின்போது, வாடிகன் நாட்டுக்கு சென்று அங்கு உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவர் போப் ஆறாம் பாலைச் சந்தித்து, மோகன் ரானடேவின் விடுதலை குறித்து , கத்தோலிக்க நாடான போர்ச்சுகளுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார் .




இதன் அடிப்படையேலே 1969-ஆம் ஆண்டு ரானடே விடுதலை செய்யப்பட்டார் . விடுதலைக்குப் பின் இந்தியா திரும்பிய மோகன் ரானடே , தனது விடுதலைக்காக பெரும் முயற்சி எடுத்த அண்ணாவின் மறைவு பற்றி கேள்விப்பட்டு சென்னை வந்து அவரது சமாதியில் இறுதி மரியாதையை செலுத்தினார். 1992-ஆம் ஆண்டு கோவாவில் இருந்து புனேக்கு சென்றார். பின்பு அண்ணாவை போலவே புற்றுநோய் பாதிப்பால் தனது 90-வது வயதில் மரணம் அடைந்தார் மோகன் ரானடே .