வைரஸ் பரவுதலின் கூடுதல் கண்காணிப்பு தேவைப்படும் தேனி மாவட்டம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதுடன், இறப்பு விகிதமும் அதிகரித்துவருகிறது



கொரோனா வைரஸ் பரவி வருவது தொடர்ந்து அதிகரிக்கும் தொடர்கதையாக இருந்து வரும் தேனி மாவட்டத்திற்கு தமிழக அரசால் தற்போது தனி கவனம் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. காரணம் தேனி மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கும் புள்ளிவிவரத்தின்படி நோய் பரவல் பட்டியலில் உள்ள எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் கொரோனா வைரஸசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. தேனி மாவட்டத்தில் போதுமான சிகிச்சை மையங்கள் இல்லாத காரணத்தினால் கொரோனா வைரஸ் பாசிட்டிவ் வந்த நோயாளிகள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.



தற்போது உள்ள சூழலில் கொரோனவைரஸ் பாசிட்டிவ் வரும் நபர்கள் எண்ணிக்கை அரசுத்தரப்பில் குறைவாக காண்பிக்கப்படும் நிலையில் வைரஸால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நபர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்து வருகிறது. கடந்த வாரங்களில் 28-ஆம் தேதி 578 பேரும் , 29 ம்  தேதி 592 பேரும் ,30-ஆம் தேதி 521 பேரும் , 31-ஆம் தேதி 514 பேரும் என ஒரு நாளில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ்சால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதே போல்  இறப்பு விகிதமும் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதாக மருத்துவ வட்டாரங்களால் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை மாவட்டத்தில் மட்டும் முதல் டோஸ் இரண்டாம் டோஸ் என 105169 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.  கடந்த 10 நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைக்கான எந்த மருந்துகளும் வழங்கப்படவில்லை என்றும் இவர்களுக்கான மருத்துவ சேவைக்கான பயன்பாடுகள் எந்த இடத்திலும் போதுமான அளவுக்கு கிடைக்கவில்லை என்பது ஒரு முக்கியமான காரணமாக புகார் எழுப்பப்படுகிறது கடந்த வருடத்தை ஒப்பிடும்போது தற்போது சிகிச்சை மையங்கள் குறைவாகவே இருக்கின்றன என்பதும் போதிய சிகிச்சை மையங்கள் இல்லாததால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாசிடிவ் நபர்கள் இயல்பாக வெளியில் சுற்றி வருவதாக புகார் எழுந்துள்ளது


இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தேனி ,ஆண்டிபட்டி, கம்பம், சட்டமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பான பல புகார்களை எடுத்து வைத்தும் தற்போது வரை மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கை இல்லை என்பது புகாராக உள்ளது . தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள மாவட்டமாக இருப்பதால் இரு மாநில எல்லைகளில் தனி கவனம் கொண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கிறது. அதேபோல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது என்கிறது மாவட்ட நிர்வாகம். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கோவை மாவட்டத்தில் அதிகமாக  உள்ள  நிலையில் தற்போது இரண்டாவது மாவட்டமாக வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்தும் தொடர்ந்து அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே தேனிமாவட்டத்தை தமிழக அரசு தனி கவனம் செலுத்தி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.