ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சரிவிகித உணவு, சீரான உடற்பயிற்சி மிகவும் அவசியம் என்கின்றனர் நிபுணர்கள். பரபரப்பான வாழ்க்கையில் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடுவது முக்கியமானது. ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டியிருக்கும். அதோடு உடல் எடையை நிர்வகிக்க வேண்டும் என்பவர்கள் உணவில் எல்லா வகையான ஊட்டச்சத்துகளும் நிறைந்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உடல் எடையை சீராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் அல்லது உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஆயுர்வேத மருத்துவம் பரிந்துரைக்கும் சில உணவுகளை காணலாம். 


உடல் எடை குறைப்பு பயணம்:


உடல் எடை அதிகமாக இருந்தால், ஆரோக்கியத்திற்காக மட்டுமே உடல் எடையைக் குறைக்க முயற்சி எடுக்க வேண்டும். தொடர்ந்து செய்யும் சில மாற்றங்கள் மூலம் உடல் எடை குறைக்கும் பயணத்தை எளிதாக மாற்றலாம். கடுமையான டயட், சீரான உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலமே உடல் எடையை குறைக்க முடியும் என்பது பரிந்துரைக்கப்பட்டுகிறது. ஆனால், உடல் எடை குறைப்பது என்பது ஒவ்வொருவரின் உடல்நிலை உள்ளிட்டவைகளுக்கு ஏற்ப  வேறுபடக்கூடியது.  ஒருவருக்கு பயன்தரும் ஃபார்முலா  மற்றவருக்கு பலனளிக்க வேண்டும் என்றில்லை. உங்கள் உடலின் நிலையை அறிந்துகொள்வது, நிபுணர்களை அணுகி பரிந்துரைகளை பெறுவது நல்லது என்று கூறப்படுகிறது.
 
பிடித்த உணவுகளை தவிர்த்து கஷ்டப்பட்டு சிலவற்றை சாப்பிட முயற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நெய், வெண்ணெய் போன்ற உணவுகளில் அதிக கொழுப்பு இருக்கிறது என்று சிலர் டயட்டில் அதை தவிர்த்துவிடுவர். ஆனால், இவற்றில் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. அளவோடு சாப்பிடலாம். பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு, துரித உணவுகள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், சர்க்கரை ஆகிய ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை தவிர்க்கவும். கீழே குறிப்பிடுள்ளவற்றை தினமும் உணவில் இருக்குமாறு பார்த்துகொள்ளலாம். 






தேன்:


தேன் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்தது என்கின்றது ஆயுர்வேத மருத்துவம். எலுமிச்சை சாறு தேன் சேர்த்து குடிப்பது, க்ரீன் டீ தேன் சேர்த்து குடிப்பது ஆகியவற்றை செய்வதன் மூலம் உடல் எடையை நிர்வகிக்கலாம். இது கபம் என்று சொல்லப்படுவதை சீராக இருக்க உதவுவதால் உடல் எடையை குறைக்க உதவும். 


பார்லி:


பார்லி ஆயுர்வேத மருத்துவத்தின் படி உடலிலுள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது. நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு பார்லி ஓர் சிறந்த உணவாக கருதப்படுகிறது. பார்லி இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைக்க உதவும். குறிப்பாக இது உடல் பருமன் ஏற்படாமல் தடுக்கும் என்று ஆற்றல் கொண்டது. இது உடலிலுள்ள நச்சுக்கள், கெட்ட கொழுப்பு ஆகியவற்றை குறைக்கும். 


மஞ்சள்:


மஞ்சள், சமையலில் பயன்படுத்தப்படும் ஒன்றாக இருப்பது நாம் அறிந்ததே. இது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அதிகமாக உள்ள கபத்தை குறைக்க மஞ்சள் உதவும் என்று ஆயுர்வேத மருத்துவம் தெரிவிக்கிறது. 


நெல்லிக்காய்:


ஆயுர்வேத மருத்துவத்தின் படி, வாதம் கபம், பித்தம் ஆகிய மூன்றையும் சீராக வைக்க உதவும் திறன் நெல்லிக்காய்க்கு உண்டு. உடல் எடையை நிர்வகிப்பதற்கும் இது உதவும். நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்க, அதிக முடி உதிர்வு பிரச்சனை இருப்பவர்கள், நெஞ்சு எரிச்சல் பிரச்சனை உள்ளிட்ட பலவற்றிற்கும் நெல்லிக்காய் மருந்தாக இருக்கும். 


இஞ்சி:


இஞ்சி செரிமான மண்டலம் சீராக இயங்க உதவும். குடல் ஆரோக்கியமாக இருந்தாலே உடலில் இருந்து நச்சுகள் வெளியேறும். ஊட்டச்சத்துகள் உறிஞ்சப்படும். ஒரு சிறிய துண்டு அளவில் இஞ்சி சாப்பிடுவது கபத்தை சீராக இருக்க உதவும். அதோடு மட்டும் இல்லாமல் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவும்.


பொறுப்புத்துறப்பு: இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.