இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி மிகவும் முக்கியமானது ஆகும். வட இந்தியாவில் முன்பு கோலாகலமாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி தற்போது தென்னிந்தியாவிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.



விநாயகர் சதுர்த்தி:


விநாயகர் சதுர்த்தி முதல் விநாயகர் சிலை கரைப்பு வரை கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். தெலங்கானாவிலும் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கமாக நடந்து வருகிறது. ஹைதரபாத்தில் அமைந்துள்ளது பந்த்லகுடா. அங்கு கீர்த்தி ரிச்மண்ட் வில்லா எனப்படும் கேட்டட் கம்யூனிட்டி எனப்படும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இங்கு மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் வசித்து வருகின்றனர்.


அங்கு வசிப்பவர்கள் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஆண்டுதோறும் சிறப்பாக கோலாகலமாக கொண்டாடுவார்கள். விநாயகர் சதுர்த்தியின்போது விநாயகருக்கு லட்டு உள்ளிட்ட பல பலகாரங்கள் படைக்கப்படுவது வழக்கம். அப்படி விநாயகருக்கு படைக்கப்படும் லட்டு ஏலத்தில் விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.


ரூபாய் 1.87 கோடிக்கு ஏலம்: 


அதேபோல, இந்தாண்டும் விநாயகர் சதுர்த்தி பூஜையில் விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு ஏலத்தில் விடப்பட்டது. பலரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் லட்டு ரூபாய் 1.87 கோடிக்கு ஏலம் போனது. வழக்கமான லட்டு போல இல்லாமல் மிகப்பெரிய வடிவில் செய்யப்பட்ட இந்த லட்டை கணபதி லட்டு என்று குறிப்பிடுகின்றனர். இவ்வளவு பெரிய தொகை கொடுத்து இந்த லட்டை ஏலத்தில் வாங்கியவர் யார்? என்று தகவல் வெளியிடப்படவில்லை. ஒவ்வொரு முறையும்  இந்த ஏலத்தில் அந்த பகுதியில் உள்ள மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் பங்கேற்பது வழக்கம்.


கடந்த 2022ம் ஆண்டு விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு ரூபாய் 1.26 கோடிக்கு ஏலம் போனது. கடந்தாண்டு விநாயகர் சதுர்த்தியில் பூஜை செய்யப்பட்ட லட்டு ரூபாய் 26 லட்சத்துக்கு ஏலம் போனது.


பிரசாதம்:


அதேபோல, ஹைதரபாத்தில் சமீபத்தில் நடந்த ஏலத்தில் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கொண்டபள்ளி கணேஷ் என்பவர் 29 லட்சத்துக்கு லட்டு ஒன்றை ஏலத்தில் வாங்கினார். அதற்கு முந்தைய ஆண்டு அதே ஏலத்தில் ரூபாய் 25.5 லட்சத்திற்கு லட்டு ஏலம் போனது. ஆந்திர மற்றும் தெலங்கானா மக்கள் திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தர்களாக உள்ளனர். திருப்பதியில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவதால் அவர்கள் லட்டை முக்கியத்துவம் வாய்ந்த பிரசாதமாக கருதுகின்றனர். அதன் காரணமாகவே லட்டு இத்தனை லட்சத்திற்கு ஏலம் போகிறது.