வளர்சிதை மாற்ற நோய்க்குறி (Metabolic Disease and Metabolic Syndrome) நமது உடலின் வெவ்வேறு உறுப்புகளில் பாயும் ரத்த நாளங்களை தனித்துவமான முறையில் பாதிக்கிறது என மருத்துவக் குழு ஒன்று தனது சமீபத்திய ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளது.


வளர்சிதை மாற்றம்


நாம் உட்கொள்ளும் உணவுப்பொருள் வேதிவினைகள் மூலம் சிறு சிறு துகள்களாக மாற்றப்பட்டு ஒருபுறம் செல்களுக்குத் தேவையான ஆற்றலாகவும், மறுபுறம் கழிவுப்பொருளாக வெளியேறுவதும் வளர்சிதை மாற்றம் ஆகும்.


நமது உடலில் வளர்சிதை மாற்றம் நன்றாக செயல்பட்டால், நாம் ஆரோக்கியத்துடனும் சுறுசுறுப்பாகவும் இயங்கலாம். இல்லையெனில் கை, கால் வலி, உடல் எடை அதிகரிப்பு தொடங்கி, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் வரை பல வியாதிகளுக்கும் வழிவகுக்கும்.


வாழ்க்கைமுறை சார்ந்த இந்தப் பிரச்னையை சரியான உணவு, உடற்பயிற்சி, எடைக்குறைப்பு ஆகியவற்றின் மூலம் கட்டுக்குள் கொண்டு வரலாம்.


வெவ்வேறு ரத்தநாளங்களில் வெவ்வேறு பாதிப்பு


இந்நிலையில், வளர்சிதை மாற்றம் தொடர்பான நோய்கள், நமது உடலின் வெவ்வேறு உறுப்புகளுக்குள் பாயும் ரத்த நாளங்களை தனித்துவமான முறைகளில் பாதிப்பதாக சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.


உதாரணமாக, கல்லீரல் மற்றும் கொழுப்பு திசுக்களில் உள்ள ரத்த நாளங்கள் அதிகப்படியான லிப்பிட்களை செயலாக்க போராடுகின்றன.  அதேபோல் சிறுநீரகத்துக்கு செல்லும் ரத்த நாளங்களில் வளர்சிதை மாற்ற நோயானது செயலிழப்பை ஏற்படுத்துகிறது.


அதேபோல் மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களில் போக்குவரத்து குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இப்படி ஒவ்வொரு உறுப்புக்குச் செல்லும் ரத்த நாளங்களிலும் இந்த வளர்சிதை மாற்றம் தொடர்பான நோய்கள் வெவ்வேறு வகையில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன எனக் கூறப்படுகிறது.


மோசமான உணவால் ஏற்படும் பாதிப்பு


இந்நிலையில், இந்த ஆய்வு குறித்து முன்னதாகப் பேசிய மருத்துவர் ஓல்கா, எதிர்காலத்தில் நோயாளிகளுக்கு ஏற்றவாறு பிரத்யேக சிகிச்சைகளை வழங்குவதற்காக இந்த ஆய்வை மேற்கொண்டதாகவும், உடல் பருமனின் மூலக்கூறு செயல்பாடுகளை தெளிவுபடுத்த விரும்புவதாகவும் கூறியுள்ளார்.


 மோசமான உணவுகளால் ஒருவரது உடலில் ஏற்கனவே ஏற்பட்டுள்ள வளர்சிதை மாற்றம் தொடர்பான நோயை உண்டாக்கும் மூலக்கூறுகளை, ஆரோக்கியமான உணவின் மூலம் குறைக்க முடியுமா என்பது குறித்தும் இந்த ஆய்வில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


இந்நிலையில், ஆரோக்கியமான உணவானது உண்மையில் ரத்த நாளங்களின் மூலக்கூறு ஆரோக்கியத்தை ஓரளவு மட்டுமே மேம்படுத்த முடியும் என்றும், தவறான உணவுப்பழக்கத்தால் ரத்த நாளங்கள் சேதமடைவதாகவும் இந்த ஆராய்ச்சிக்குழு கண்டறிந்துள்ளது.


மேலும் படிக்க: World Diabetes Day 2022: நீரிழிவுக்கு முந்தைய நிலை.. பலன் அளிக்கும் ஆயுர்வேதம்.. இதையெல்லாம் செஞ்சு டயபட்டீஸுக்கு குட்பை சொல்லுங்க..