இதில் புரோட்டின், புரதச்சத்து பொட்டாசியம் பாஸ்பரஸ், விட்டமின் பி மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துகள் உள்ளன. வேர்கடலை மிகவும் ஆரோக்கியமானது. இதனை சாப்பிடுவது உடலுக்கு பல வகையில் நன்மை தருகின்றது.


வேர்க்கடலைகளில் நிறைந்துள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட் மற்றும் அமினோ அமிலம் ஆகியவை உடலுக்கு மற்றும் ரத்த நாளங்களுக்கு நன்மை அளிக்கும் என கூறப்படுகிறது. நார்சத்துக்களும், புரதம் இரண்டையும் கொண்டுள்ள வேர்க்கடலைகள் உடலுக்கு சக்தி அளிக்க உதவுவதாக கூறப்படுகிறது. இப்போது வேர்கடலை பர்பி எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க.


தேவையான பொருட்கள்


வேர்க்கடலை - 200 கிராம், நெய் - 200 கிராம், சர்க்கரை - 300 கிராம், முந்திரி, பாதாம் - தேவையான அளவு, ஏலக்காய் தூள் - சிறிதளவு, தேங்காய்த் துருவல் - சிறிதளவு.


செய்முறை

வேர்க்கடலையை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து  தோல் நீக்கி மிக்ஸியில் மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.


பின் பாதாம், முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையும் தண்ணீரையும் சேர்த்துக் கொதிக்க வைத்து, கம்பி பாகு பதம் வந்தவுடன், அதில் அரைத்த வேர்க்கடலை விழுதைச் சேர்த்து கிளற வேண்டும்.


வேர்க்கடலை கலவையில் சிறிது சிறிதாக நெய் சேர்த்தபடி கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அடுத்து தேங்காய்த் துருவல், பாதாம், முந்திரி, ஏலக்காய் தூள் கலந்து, கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியவுடன் துண்டுகளாக்கி  பரிமாறலாம்.  தித்திப்பான வேர்க்கடலை பர்ஃபி தயார்.


( குறிப்பு: சர்க்கரை பாகு தயாரிக்க இரு பங்கு சர்க்கரைக்கு ஒரு பங்கு தண்ணீர் சேர்த்து பாத்திரத்தை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். சர்க்கரை நன்கு உருகி நுரை நுரையாக கொதித்து வரும். இப்போது ஒரு சிறிய டம்ளரில் அரை டம்ளர் அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.


சர்க்கரை பாகை ஒரு கரண்டியில் சிறிதளவு எடுத்து  அந்த டம்ளர் தண்ணீரில் , ஒரு துளியை விட வேண்டும். சர்க்கரை கரைசல் கரையாமல் நீருக்கடியில் சென்று முத்துப்போன்று நின்று விட்டால் பாகு பதம் வந்துவிட்டது என்று அர்த்தம். ஒருவேளை அந்த சர்க்கரை கரைசல் தண்ணீரில் கரைந்து விட்டால்  மீண்டும் ஓரிரு நிமிடங்கள் அதை பாகு பதம் வரும் வரை கொதிக்க விட வேண்டும். )


மேலும் படிக்க


Competency Test: மாணவர்களுக்கு மாதாமாதம் மதிப்பீட்டுத் தேர்வுகள்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..முழு விவரம்


Delhi law: பறிக்கப்பட்ட டெல்லி அரசின் அதிகாரம்.. சட்டப்போராட்டத்தை கைவிடாத அரவிந்த் கெஜ்ரிவால்.. காத்திருக்கும் அடுத்த அதிரடி