டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரங்களை குறைக்கும் வகையில், மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. அவசர சட்டத்தை தொடர்ந்து, டெல்லி அரசு நிர்வாக சட்டத்திருத்த மசோதாவை (டெல்லி சேவைகள் மசோதா) மத்திய அரசு கொண்டு வந்தது. இது டெல்லி அரசின் உயர் அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றத்துக்கு சிபாரிசு செய்ய ஒரு ஆணையம் அமைக்கவும், இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு இறுதி அதிகாரம் அளிக்கவும் வழி வகை செய்கிறது.


நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, டெல்லி நிர்வாக சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கடந்த 12ஆம் தேதி ஒப்புதல் அளித்தார். இதை தொடர்ந்து, மசோதா சட்டமானது.


புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், துணை நிலை ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும்  உள்ள அதிகார வரம்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சட்டத்தின்படி, அதிகாரிகளின் நியமனம், பணியிட மாற்றம் உள்ளிட்டவற்றை முடிவு செய்ய தேசிய தலைநகர் சிவில் சேவை ஆணையம்  உருவாக்கப்பட உள்ளது.


சட்ட பேராட்டத்தை கைவிடாத அரவிந்த் கெஜ்ரிவால்:


ஏற்கனவே, ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படும் விவகாரத்தில் டெல்லி அரசுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த தீர்ப்பை தொடர்ந்துதான், மத்திய அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில்  டெல்லி அரசு தொடர்ந்த வழக்கு ஏற்கனவை நிலுவையில் உள்ளது.


தற்போது, அவசர சட்டம், சட்டமாக மாறியுள்ள நிலையில், அவசர சட்டத்திற்கு எதிரான வழக்கை சட்டத்திற்கு எதிரான வழக்காக மாற்றி திருத்தம் மேற்கொள்ள டெல்லி அரசுக்கு இன்று உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அவசர சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் திருத்தம் மேற்கொள்வதற்கு அனுமதி கோரி டெல்லி அரசின் சார்பாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானார்.


அப்போது, டெல்லி அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இதை தொடர்ந்து, மனுவில் திருத்தம் மேற்கொள்ள டெல்லி அரசுக்கு, இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையிலான அனுமதி வழங்கியது. திருத்தப்பட்ட மனு மீது பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நான்கு வார கால அவகாசம் வழங்கியுள்ளது.
 
டெல்லி அரசின் அதிகாரம் பறிப்பு:


இதில் முதலமைச்சர்,  முதன்மை செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். மத்திய அரசால் இரு செயலாளர்களும் நியமிக்கப்படுவார்கள். ஆணையத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் எடுக்கும் முடிவுகள் துணை நிலை ஆளுநருக்கு பரிந்துரைகளாக அனுப்பப்படும். அவற்றை நிராகரிக்கவோ, மறுபரிசீலனைக்கு அனுப்பவோ துணை ஆளுநர் அதிகாரம் பெற்றுள்ளார்.


தனது சொந்த விருப்பத்தின் பேரில் டெல்லி சட்டப்பேரவையை கூட்டவோ, சட்டப்பேரவை நாட்களை நீடிக்கவோ துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.