2023 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நல்லாசிரியர் விருது:
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளையே ஆசிரியர் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். இந்த நாளில் இந்தியா முழுவதும் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களின் சேவையை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் சார்பில் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருவது வழக்கம்.
இதில் மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதும், மாநில அரசு சார்பில் நல்லாசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்ற பெயரிலும் வழங்கப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர், ஆசிரியைகள் பல்வேறு மாநிலங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இருவர்:
ஒருவர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் ஆவார். மற்றொருவர் தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியத்தில் உள்ள வீரகேரளம்புதூர் அரசு பள்ளி ஆசிரியை மாலதி ஆவார். இவர்கள் இருவருக்கும் டெல்லி விஞ்ஞான் பவனில் செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்க உள்ளார். நடப்பாண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 50 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் தமிழ்நாடு அரசு சார்பில் 385 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது நடப்பாண்டு வழங்கப்பட உள்ளது. இதற்கான பட்டியல் இறுதி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணி முடிவடைந்த பிறகு இறுதிக்கட்ட பட்டியல் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாக உள்ளது கூறப்படுகிறது.
மேலும் படிக்க: Competency Test: மாணவர்களுக்கு மாதாமாதம் மதிப்பீட்டுத் தேர்வுகள்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..முழு விவரம்