நிறுவனர் விஎஸ்எஸ் மணி மற்றும் அவரது குடும்பத்திடம் இருந்து 15.62 சதவீத பங்குகளை  (ஒரு பங்கு 1020 ரூபாய், மொத்தம் ரூ.1332 கோடி) ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் வாங்கி இருக்கிறது.


மேலும் ஓபன் ஆபர் மூலம் 26 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் வாங்க இருக்கிறது. இந்த பங்குகளின் மதிப்பு  ரூ.2,222 கோடி.இந்த நிறுவனத்தை வாங்குவதற்காக மொத்தம் ரூ.5719 கோடியை ரிலையன்ஸ் ஒதுக்கி இருக்கிறது.


ரிலையன்ஸ் வாங்கியதுபோல நிறுவனர்கள் வசம் 10.7 சதவீத பங்குகள் இருக்கும். ரிலையன்ஸ் குழுமம் வாங்கி இருந்தாலும் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக வி.எஸ்.எஸ். மணியே தொடருவார் என ரிலையன்ஸ் அறிவித்திருக்கிறது.


இந்த நிறுவனத்தின் வசம் 3 கோடி பொருட்கள் மற்றும் சேவைகள் வழங்கும் நிறுவனங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு காலாண்டிலும் பிரத்யேகமாக 12.9 கோடி வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் இணையதளம், செயலி மற்றும் போன் மூலமாக வருகிறார்கள். வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் முடிவில் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.6,690 கோடியாக  இருக்கிறது.




ஆனால் இது இந்த நிறுவனத்தின் உச்சபட்ச சந்தைமதிப்பு அல்ல. 2014-ம் ஆண்டு சமயத்தில் சுமார் ரூ.12,000 கோடிக்கும் மேலே நிறுவனத்தின் சந்தை மதிப்பு இருந்தது. ஆனால்  அதன்பிறகு படிப்படையாக குறையத் தொடங்கியது.தற்போது 6690 கோடி ரூபாய் நிறுவனமாக இருந்தாலும் 1996-ம் ஆண்டு சுமார் 50000 ரூபாயில் தொடங்கப்பட்ட நிறுவனம் இது.


 விஎஸ்எஸ் மணி யார்?


Venkatachalam Sthanu Subramani என்னும் முழுபெயரை கொண்ட விஎஸ்எஸ் மணி தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். 1966-ம் ஆண்டு ஜம்ஷெட்பூரில் உள்ள டாடா மருத்துவமனையில் பிறந்தார். அதன் பிறகு கொல்கத்தாவுக்கு குடும்பம் குடிபெயர்ந்துவிட்டது. டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும்போது இவரது தந்தை இறந்துவிட்டார். அதனால் நிதி நிலைமை காரணமாக வேலைக்கு செல்ல வேண்டிய சூழல்.


தகவல்களை சேகரிக்கும் யெல்லோ பேஜ் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். இந்த புத்தகத்தை வாங்குவதற்கு பதிலாக போன் செய்யும்போது தேவையான தகவல் கிடைத்தால் எப்படி இருக்கும் என யோசித்தார். அதன் காரணமாக 1989-ம் ஆண்டு `ஆஸ்க் மீ’ என்னும் நிறுவனத்தை தொடங்கினார். ஆனால் இந்த நிறுவனம் பெரும் தோல்வியில் முடிந்தது.


முதல் காரணம் அப்போதைய மக்கள் தொகையில் ஒரு சதவீதத்தினருக்கு கூட போன் இல்லை. இரண்டாவது காரணம் `ஆஸ்க் மீ’ நிறுவனம் விண்ணப்பித்திருந்த போனுக்கு கூட இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது. அதனால் இந்த நிறுவனத்தை சில ஆண்டுகளிலே மூடும் நிலை உருவானது.


அதன் பிறகு சிறு சிறு வேலை செய்கிறார். திருமணம்  தொடர்பான தகவல் தொடர்பு பத்திரிகை ஒன்றினை தொடங்குகிறார். இருந்தாலும் பெரிய அளவிலான வளர்ச்சி இல்லை. இந்த சூழலில் இந்தியாவில் போன்களின் எண்ணிக்கை வேகமாக உயர்கிறது. அதனால் ஆஸ்க் மீ ஐடியாவை மீண்டும் தூசி தட்டி எடுக்கிறார். ஏழு ஆண்டுகளுக்கு பிறகு 1996-ம் ஆண்டு ஜஸ்ட் டயல் என்னும் பெயரில் புதிய நிறுவனத்தை தொடங்குகிறார் விஎஸ்எஸ் மணி. அடுத்த ஆண்டே ஜஸ்ட் டயலுக்கான இணையதளமும் தொடங்கப்படுகிறது.




அது டெக்னாலஜி பூம் என்பதால் இணையதளத்துக்கு பெரும் செலவு செய்யப்படுகிறது. ஆனால் பெரிய வருமானம் இல்லை. தவிர டாட் காம் பபுள்க்கு பிறகு ஐடி நிறுவனங்களுக்கு எதிர்காலம் இல்லை என்பது போன்ற சூழல் இருந்ததால் 2001-ம் ஆண்டு இணையதளத்தை மூடிவிட்டு போன் மூலமே சேவைகளை வழங்கிவந்தார்கள்.


மீண்டும் 2004-ம் ஆண்டு இணையதள ஐடியாவை தொடங்க முடிவெடுத்தார்கள். ஆனால் அதற்கு பணம் செலவழிக்க விளம்பரதாரர்கள் மறுத்துவிட்டனர்.


இந்த சமயத்தில் (2006) சாயிப் (SAIF) பார்னர்ஸ் (தற்போது இந்த நிறுவனம் எலிவேஷன் கேபிடல் என்னும் பெயரில் செயல்படுகிறது) என்னும் முதலீட்டு நிறுவனம் ஜஸ்ட் டயல் நிறுவனத்திடம் போன் மூலம் சில தகவல்களை பெற்றிருக்கிறார்கள். அதன் பிறகு நன்றாக செயல்படுவதால் நிறுவனரிடம் உரையாடிய பிறகு இந்த தொழிலுக்கு எதிர்காலம் இருக்கிறது என்பதால் சாயிப் பார்னர்ஸ் , டைகர் குளோபல் உள்ளிட்ட பல முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்கின்றார்கள். இதன் பிறகே மீண்டும் 2007-ம் ஆண்டு இணையதளம் தொடங்கப்படுகிறது. இணையதளம் பதிவு செய்து பத்தாண்டுகளுக்கு பிறகே முழுமையாக செயல்பட தொடங்குகிறது.


ஆனால் அப்போது இந்தியாவில் இணையதளம் பிரபலம் ஆகவில்லை. பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலே இருந்தது. இருந்தாலும் பெரிய வளர்ச்சிக்கான வாய்ப்பு இருப்பதால் அதில் முதலீடு செய்ய நிறுவனம் முடிவெடுத்தது.


ஆனால் இதற்கு நிறுவனங்களிடம் இருந்து பெரிய வரவேற்பு இல்லை. போன் மூலம் சேவை கிடைத்தால் போதும் என்னும் சூழலே இருந்தது.அதனால் இணையதளத்துக்கு என பிரத்யேக விற்பனை டீம் உருவாக்கப்பட்டது. ஆனால் அப்போதும் பெரிய பயன் இல்லை.


2009-ம் ஆண்டு முக்கியமான முடிவை எடுக்கிறார் மணி. போன், மொபைல் மற்றும் இணையதளம் மூன்றுக்கும் சேர்ந்துதான் பணம் செலுத்த வேண்டும். ஒருவேளை இணையம் தேவையில்லை என்றால் எதுவும் கிடையாது என்று கூறவே மூன்றுக்கும் சேர்ந்தே விற்கப்பட்டது.


ஆனால் வாடிக்கையாளர்கள் வாய்ஸ் காலுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தனர்.இதன் பிறகு வெப் மற்றும் செயலிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அமிதாப் பச்சன் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் விளம்பர தூதராக நியமனம் செய்யப்பட்டனர்.




2013-ம் ஆண்டு ஐபிஒ வெளியானது. அதன் பிறகு பங்குச்சந்தையில் நல்ல வரவேற்பு இருந்தாலும் இந்த ஏற்றம் சில ஆண்டுகளுக்கு மட்டுமே நீடித்தது. அதன் பிறகு நிறுவன முதலீட்டாளர்கள் சிலர் வெளியேறினார்கள். ஒரு கட்டத்தில் 1,800 ரூபாய்க்கு மேலே வர்த்தகமான பங்கு 300 ரூபாய்க்கு கீழே வர்த்தமானது. இதனால் பங்குச்சந்தையில் நிறுவனர் மணி மற்றும் அவரது குடும்பத்தினர் பங்குகளை  சந்தையில் இருந்து வாங்கி சரிவை தடுத்தனர். இதனால் பங்குகளின் விலை மீண்டும் உயரத்தொடங்கியது. கடந்த வெள்ளிக்கிழமை ( ஜூலை 16) வர்த்தகத்தின் முடிவில் ரூ.1072 என்னும் அளவில் ஜஸ்ட் டயல் பங்கு வர்த்தகமானது.


ரிலையன்ஸுக்கு முன் டாடா


ஜஸ்ட் டயல் ஆரம்பிக்கப்பட்ட போது நிறுவனங்களுக்கு இருந்த வாய்ப்பும் தற்போது பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட பல தளங்கள் உருவான பிறகு இருக்கும் வாய்ப்பும் வேறு. அதனால் நிறுவனத்தின் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் சுருங்கிக்கொண்டே வந்தது. இந்த நிறுவனத்தில் கடன் இல்லாத நிறுவனம் என்பது நல்ல செய்தியோ, அதேபோல வளர்ச்சிக்கான பெரிய அளவிலான வாய்ப்பும் இல்லை என்பது கெட்ட செய்தியே.


இதன் காரணமாகவே பங்குகளில் பெரிய ஏற்றம் இல்லை. ரிலையன்ஸ் குழுமம் சிறு நிறுவனங்களை வாங்குவதை போலவே டாடா குழுமத்தின் டிஜிட்டல் பிரிவும் மற்ற நிறுவனங்களை வாங்கி வருகிறது.


இந்த ஆண்டு தொடக்கத்தில் டாடா டிஜிட்டல் நிறுவனமும் ஜஸ்ட் டயல் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால் அந்த பேச்சு வார்த்தை வெற்றியடையவில்லை.இந்த சூழலில் ஜஸ்ட் டயலை ரிலையனஸ் வாங்கி இருக்கிறது. முறையான பிஸினஸ் சார்ந்த படிப்பு இல்லாமல் 25 ஆண்டு காலம் ஒரு நிறுவனத்தை நடத்துவது என்பது எளிதல்ல.


அடுத்த கட்ட வளர்ச்சிக்கு ஜஸ்ட் டயலுக்கும் மணிக்கும் வாழ்த்துகள்.