காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருச்சி, கடலூர், உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு இதுவரை 10 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 3.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். தற்போது 40 நாட்களில் இருந்து 50 நாட்கள் ஆன சம்பா பயிர்கள் அனைத்தும் ஒரு அடி தூரம் வளர்ந்து வந்துள்ளன. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 தினங்களுக்கும் மேலாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக 60 ஆயிரம் ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
திருவாரூர் கொரடாச்சேரி மன்னார்குடி வடுவூர் கோட்டூர் திருத்துறைப்பூண்டி நன்னிலம் குடவாசல் அம்மையப்பன் கானூர் பின்னவாசல், உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 60 ஆயிரம் ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. உடனடியாக மழை நீரை வடிய வைத்து அதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும், அதுமட்டுமின்றி பாதிப்படைந்த பகுதிகளை வேளாண்துறை அதிகாரிகள் நேரடியாக வந்து கணக்கெடுப்பு செய்ய வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து இந்த மழை பெய்தால் சம்பா பயிர்கள் முழுவதுமாக அழுக கூடிய நிலை உருவாகும், இதுவரை ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளோம் ஏற்கனவே மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்தித்து அதிலிருந்து மீண்டு வருவதற்குள் அடுத்த இழப்பை விவசாயிகளால் தாங்க முடியாத நிலை உருவாகும், ஆகையால் தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு உதவுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தற்பொழுது வயல்களில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைத்தவுடன் உடனடியாக உரம் கொடுக்க வேண்டும், ஆகையால் தமிழ்நாடு அரசு அனைத்து வேளாண் கிடங்குகளிலும் தட்டுப்பாடின்றி உரம் யூரியா உள்ளிட்ட இடுபொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏற்கனவே திருவாரூர் மாவட்டத்தில் கடுமையான உரத் தட்டுப்பாடு நிலவுவதால் தனியார் கடைகளில் அதிக விலைக்கு உரங்களை விற்பனை செய்து வருகின்றனர். ஆகையால் தட்டுப்பாடின்றி உரங்கள் கிடைப்பதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். முழுவதுமாக பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கை வேளாண்மை துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக ஆறுகளில் அதிக அளவு தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் எந்தெந்த இடங்களில் ஆற்றின் கரை பலவீனமாக உள்ளதோ அந்த இடத்தில் மணல் மூட்டைகளை கொண்டு பாதுகாப்பதற்கான நடவடிக்கை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.