Biotin Laddu : 40-ஐ கடந்துவிட்டால் நமக்கு உடலில் பல்வேறு இன்னல்கள் வரிசைகட்டி சேர்ந்து கொள்கின்றன. இப்போதைய உணவு முறை, கணினி முன்னாலேயே இருக்க வேண்டிய தொழில்முறை எனப்பலவும் சேர்ந்து நோய்களை வெற்றிலை பாக்கு வைத்து வரவேற்று சேர்க்கின்றன. அதனால் வரும்முன் காப்பது அவசியம். அதை மாத்திரை வடிவில் இல்லாமல் உணவாக எடுத்துக் கொண்டால் இன்னும் சிறப்பு.


அப்படிப்பட்ட டிப்ஸ்தான் இப்போது சொல்கிறோம். இதற்குப் பெயர் பயோடின் லட்டு. இதை எப்படிச் செய்வது என்று பார்ப்போமா?


இந்த பயோடின் லட்டு உடலில் சேர்க்கும் சத்தால் கேசம் நன்றாக வளர்வதோடு சருமமும் நகங்களும் ஆரோக்கியம் பெறச் செய்யும். ஒரு நபரின் கேசம், சருமம், நகம் பார்த்தே அவர் உள்ளார்ந்து எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறார் என்பதை சொல்லிவிட முடியும். இந்த பயோடின் லட்டில் இரும்புச் சத்து, கால்சியம், புரதம் இருக்கிறது. இதை 40 வயது கடந்தவர்கள் தான் சாப்பிட வேண்டுமென்பதில்லை. குழந்தைகளுக்கும் தரலாம்.


Biotin லட்டு செய்ய தேவையான பொருட்கள்:
100 கிராம் பாதாம்
75 கிராம் வேர்க்கடலை
பூசணி விதை (50 கிராம்)
சூரியகாந்தி விதை (50 கிராம்)


செய்முறை:


முதலில் பாதாமை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். (அடுப்பு மிதமான சூட்டில் இருக்க வேண்டும்)
அடுத்ததாக வேர்க்கடலையையும் லேசாக வறுத்துக் கொள்ளவும்.
கடைசியாக பூசணி மற்றும் சூரியகாந்தி விதையையும் லேசாக சூடேறும் வரை வறுத்துக் கொள்ளவும்.
அரை கப் (50 கிராம்) தேங்காய்த் துருவலை ஈரப்பதம் போகும் வரை வதக்கிக் கொள்ளவும். இல்லாவிட்டால் ரெடிமேடாகக் கிடைக்கும் ட்ரை டெஸிகேடட் தேங்காயை வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவற்றுடன் 50 கிராம் ஆளி விதை சேர்த்துக் கொள்ளலாம். இதில் 4,5 ஏலக்காய் சேர்க்கவ்வும். இவை அனைத்தையும் மிக்ஸர் ஜாரில் அரைத்துக் கொள்ளவும். பின்னர் 120 கிராம்   கேழ்விரகு மாவு எடுத்துக் கொள்ளவும். அதை லேசாக 5 நிமிடம் வரையிலும் மிதமான சூட்டில் வைத்து வறுத்துக் கொள்ளவும்.


பின்னர் அரை கப் வெல்லத்தில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். வெல்லம் போட்ட சிறிது நேரத்தில் கொட்டை நீக்கிய பேரிச்சம்பழம் பத்து சிறு துண்டுகளாக்கி சேர்க்கவும். அத்துடன் வறுத்த கேழ்விரகு மாவை கொட்டிக் கிளறுங்கள் ஈரம் அதிகம் இருப்பது போல் இருக்கும். ஆனால், நாம் பொடித்து வைத்த நட் பவுடரில் சேர்க்கும் போது சரியான பதம் வந்துவிடும். அப்படி வந்தவுடன்  விருப்பப்படும் அளவில் உருண்டையாக உருட்டி மீண்டும் ட்ரை டெஸிகேட்டட் தேங்காய் துருவலில் தோய்த்து வைக்கவும்.


இது மிகவும் சத்தான பயோடின் உருண்டை.