உலகின் நான்காவது மிகப்பெரிய பணக்காரர் பில் கேட்ஸ் இந்திய உணவான சப்பாத்தி செய்யும் வீடியோ காட்சிகள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன.


சப்பாத்தி செய்யும் பில் கேட்ஸ்


அதானியின் சரிவுக்கு பின்னர் பில்கேட்ஸ் உலக பணக்காரர் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறினார். இன்றைய பணக்காரர்களாக ஜெப் பெசோஸ், எலன் மஸ்க் ஆகியோர் கடந்த ஐந்தாறு வருடங்களில் வளர்ந்தவர்கள் ஆவார்கள். ஆனால் பல ஆண்டுகளாக நமக்கு தெரிந்த ஒரு பணக்காரராக திகழ்ந்து இன்றைய நவீன உலக பணக்கார பட்டியலிலும் போட்டியில் இருப்பவர் பில் கேட்ஸ். இவர் இந்தியாவின் பாரம்பரிய உணவான சப்பாத்தி செய்து சாப்பிடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார்.






எய்டனின் இந்திய பயணம்


பில் கேட்ஸ் சப்பாத்தி செய்வதற்கு அமெரிக்காவின் புகழ்பெற்ற செஃப் எய்டன் உதவுகிறார். எய்டன் சமீபத்தில் இந்தியா வந்து சென்றதாகவும் இங்கிருந்து சப்பாத்தியை சரியாக செய்வதற்கு கற்றுச்சென்றதாகவும் விடியோவில் கூறுகிறார். அவர் சமீபத்தில் பீஹார் மாநிலத்திற்கு வந்து, அங்குள்ள கோதுமை விவசாயிகளுடன் உரையாடி, அவர்களோடு இருந்து சப்பாத்தி செய்வதற்கு கற்றுச்சென்றது குறிப்பிடத்தக்கது. 


தொடர்புடைய செய்திகள்: HBD Simbu : எண்டே கிடையாது டா.. தமிழ் சினிமாவில் தனி நாற்காலி.. சிம்பு பிறந்தநாள் இன்று..


பில் கேட்ஸ் சமைப்பாரா?


விடியோவில் பில் கேட்ஸ்-இடம் எய்டன், "கடைசியாக எப்போது சமைத்தீர்கள்?", என்று கேட்கிறார். அதற்கு அவர் "சூப் சுட வைப்பது என்றால், தினமும் செய்கிறேன்… சமையல் பொருட்கள் பயன்படுத்தி புதிதாக டிஷ் உருவாக்குவது என்றால்… பல காலங்கள் முன்னர் இருக்கலாம்", என்று கூற எய்டன் சிரிக்கிறார். 






இன்ஸ்டாகிராம் வீடியோ


விடியோவில் எப்படி சப்பாத்தி மாவு கலப்பது என்று எய்டன் கற்றுக்கொடுக்க, பில் கேட்ஸ் கோதுமை மாவில் தண்ணீர் கலந்து, உப்பிட்டு கலக்குகிறார். ஒரு வழியாக சப்பாத்தி மாவு செய்த அவர்கள் அதனை தேய்க்கும் படலத்திற்கு வருகிறார்கள். எய்டன் அருமையாக தேய்க்க, பில் கேட்ஸ் தேய்ப்பதற்கு சிரமப்படுகிறார். பின்னர் சப்பாத்தியை நெய் சேர்த்து சுட்டு, பனீர் மற்றும் சோறுடன் இருவரும் சாப்பிடுகின்றனர். வீடியோ வெளியாகி 8 மணி நேரத்தில் ஐந்து லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும் இந்த வீடியோவை இதுவரை நாற்பதாயிரம் பேர் லைக் செய்துள்ளனர். இந்த பதிவில் பில் கேட்ஸ், "நாங்கள் ஒன்றாக இணைந்து இந்திய ரொட்டியை உருவாக்கினோம். எய்டன், இந்தியாவின் பீகார் பயணத்திலிருந்து திரும்பி வந்துள்ளார், அங்கு அவர் கோதுமை விவசாயிகளை சந்தித்தார், புதிய ஆரம்ப விதைப்பு தொழில்நுட்பங்களால் விளைச்சல் வியத்தகு முறையில் அதிகரித்துள்ளது என்று கூறினார். அவர் "திதி கி ரசோய்" சமூக கேன்டீன்களில் உள்ள பெண்களையும் சந்தித்தார், அவர்கள் சரியான ரொட்டியை எப்படி தயாரிப்பது என்ற தங்கள் நிபுணத்துவத்தை மனதார அவரிடம் பகிர்ந்து கொண்டுள்ளனர்", என்று எழுதினார்.