ஒரு மனிதனுக்கு அவனுடைய அடுத்தடுத்த தேடல்கள் தான் வாழ்க்கை தரும் அன்பு பரிசாகும். அது எந்த துறையாக இருந்தாலும், தேடல்கள் உள்ளவர்களையே இந்த சமூகம் ஒருபடி மேலே நினைவில் வைத்திருக்கும். அதுவே சினிமா துறை என்றால் சொல்லவா வேண்டியிருக்கும். இந்த துறையில் பன்முக திறமை கொண்டிருக்கும் கலைஞர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். சிலருக்கு அது பிறப்பிலேயே கை வந்த கலையாக இருக்கும். அப்படியான கலைக்கு சொந்தக்காரர் எஸ்டிஆர் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் சிலம்பரசன்... அவர் இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 






“வாரிசு” நடிகர் 


தமிழ் சினிமா நடிகர் திலகம் சிவாஜி தொடங்கி எத்தனையோ நடிகர்களின் வாரிசுகளை நடிப்பு, இசை,இயக்கம், காஸ்ட்யூம் டிசைனர், பாடகி என பல துறைகளில் பார்த்தாகி விட்டது. ஆனாலும் சொந்த திறமை இருந்தால் தான் என்றைக்கும் நிலைக்க முடியும் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு “சிலம்பரசன்”.தமிழ் சினிமாவின் பன்முக கலைஞர் என பெயரெடுத்த டி.ராஜேந்தர் - நடிகை உஷா தம்பதியினரின் மூத்த மகனான சிம்பு, 1984 ஆம் ஆண்டு “உறவை காத்த கிளி” என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 






தொடர்ந்து  மைதிலி என்னை காதலி, தாய் தங்கை பாசம் , ஒரு வசந்த கீதம் , என் தங்கை கல்யாணி , எங்க வீட்டு வேலன் , மோனிஷா என் மோனாலிசா , ஒரு தாயின் சபதம் , சம்சார சங்கீதம் , சாந்தி என்னது சாந்தி, மோனிஷா என் மோனாலிசா  என தந்தை டி.ராஜேந்தர் படங்களில் சிம்பு குழந்தை நட்சத்திரமாக தோன்றினார். மிகை நடிப்பு இல்லாமல் அனைவரையும் கவர்ந்த சிம்பு “லிட்டில் சூப்பர் ஸ்டார்” என அன்புடன் அழைக்கப்பட்டார். குறிப்பாக  என் தங்கை கல்யாணி , எங்க வீட்டு வேலன் ஆகிய இருபடங்கள் குழந்தை சிம்புவின் சிறந்த நடிப்புக்கு சான்று. 


இளைஞர்களை கவர்ந்த சிம்பு 


குழந்தை நட்சத்திரமாக சிம்புவை நடிக்க வைத்த டி.ராஜேந்தர், காதல் அழிவதில்லை படம் ஹீரோவாகவும் அழைத்து வந்தார். தொடர்ந்து பிற இயக்குநர்களின் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். தம், அலை படங்கள் சொதப்ப, கொவில் படம் சிறப்பான வரவேற்பை அளித்தது. இளைஞர்களை கவரும் படங்களை சிம்பு தேர்வு செய்ய ஆரம்பித்தார். குத்து, மன்மதன், தொட்டிஜெயா, சரவணா, வல்லவன், காளை,சிலம்பாட்டம், விண்ணைத்தாண்டி வருவாயா, வானம், ஒஸ்தி, போடா போடி, வாலு, இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், செக்க சிவந்த வானம், வந்தா ராஜாவாதான் வருவேன், ஈஸ்வரன், மாநாடு, வெந்து தணிந்தது காடு  என பல படங்களில் நடித்தார். 


தந்தை வழியில் பயணம் 


தந்தைப் போலவே தன் படங்களில் பாடல்களை பாட தொடங்கினார்.சந்தானம் நடித்த சக்கப்போடு போடு ராஜா படத்திற்கு இசையமைத்தார் தொடர்ந்து மன்மதன், வல்லவன் படங்களை இயக்கி ஆச்சரியமளித்தார். நடிகர் விஜய்க்கு அடுத்தப்படியாக டான்ஸில் சிறந்தவர் சிம்பு என பெயரெடுத்தார். அதுமட்டுமல்லாமல் சின்னத்திரைக்கு சென்ற சிம்பு ஜோடி நம்பர் ஒன் சீசன் -2 வில் நடுவராகவும், பிக்பாஸின் ஓடிடி நிகழ்ச்சியான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். இப்படி பன்முக கலைஞராக திகழ்ந்த சிம்புவை சுற்றி சர்ச்சைகளும் பஞ்சமில்லாமல் இருந்தது.


காதல் டூ பாடல் வரிகள் வரை சர்ச்சை 


தமிழ் சினிமாவில் சிம்பு ஆரம்பம் காலம் தொட்டே சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அவரது பல படங்களின் இயக்குநர்கள் சிம்பு நேரடியாகவே தங்கள் பணிகளில் தலையிடுவதாக சொல்லி குற்றம் சாட்டினர். லிங்குசாமி இயக்கிய வேட்டை படத்தில் முதலில் சிம்பு தான் நடிப்பதாக இருந்தது. பின்னர் அந்த கேரக்டரில் நடிகர் ஆர்யா நடித்திருந்தார். சிம்புவின் நடிப்பில் கெட்டவன், வேட்டை மன்னன், கான் உள்ளிட்ட பல படங்கள் கைவிடப்பட்டது. இது நம்ம ஆளு படத்தில் அவரது தம்பி குறளரசன் இசையமைத்ததால் படம் தாமதமானது. இதற்கிடையில் சிம்புவும் தனது கெட்டப்பை மாற்றியதால் இயக்குநர் பாண்டிராஜூடன் கருத்து மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. 






தொடர்ந்து கௌதம் மேனன் அச்சம் என்பது மடமையடா படத்தின் ஷூட்டிங்கிற்கு சிம்பு நேரம் தவறி வந்ததாக தெரிவித்தார். இதன்பின்னர் அவர் நடித்த அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படம் படுதோல்வி அடைந்தது. இந்த படத்திற்கு பட இடையூறுகளை சிம்பு கொடுத்ததாக புகார் எழுந்து, அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு போடும் நிலை வரை சென்றது. அவர் வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு நீக்கப்பட்டார். 


நடிகைகளுடன் காதல் 


சிம்பு என்றாலே காதல் மன்னன் என்னும் அளவுக்கு தன் படங்களின் பாடல்களை உருகி உருகி எழுதியிருப்பார். அதேசமயம் நடிகை நயன்தாராவுடன் வல்லவன் படத்தில் நடிக்கும் போது காதலில் விழுந்தார். ஆனால் அடுத்த ஆண்டிலேயே இந்த ஜோடி பிரிந்தது. தொடர்ந்து வாலு படத்தில் நடிக்கும் போது நடிகை ஹன்சிகாவுடன் காதல் இருப்பதை உறுதி செய்தார். அடுத்த சில மாதங்களிலேயே இந்த காதல் முடிவுற்றது. 


பாடல் சர்ச்சை 


லூசுப்பெண்ணே, எவண்டி உன்னைப் பெத்தான் உள்ளிட்ட சர்ச்சையான வரிகளோடு பாடல் எழுதிய சிம்பு, “பீப் பாடல்” மூலம் அனைத்து தரப்பு மக்களிடம் கடும் எதிர்ப்புகளைப் பெற்றார். 


“மீண்டு”ம் வந்த எஸ்டிஆர்


 சிலம்பரசன் தேசிங்கு ராஜேந்தர் (எஸ்டிஆர்) என்ற தனது முழுப்பெயருடன் இரண்டாவது இன்னிங்ஸை மாநாடு படத்தின் மூலம் தொடங்கிய சிம்பு இப்போது தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் முதலில் இருந்தே தனது கேரியரில் கவனம் செலுத்தி வந்தால் இன்று சிம்புவின் லெவல் வேறு மாதிரி இருந்திருக்கும் என்று ரசிகர்களும், அவர் திறமையான மனிதர் தான் என சினிமா தரப்பும் சிம்புவை விட்டுக்கொடுக்காமல் பாராட்டும் அளவுக்கு அனைவருக்கும் பேவரைட் ஆக இருப்பதே சிம்புவின் சாதனை தான்..!


இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சிம்பு...!