ஜனவரி தைராய்டு விழிப்புணர்வு மாதம் என்பது நமக்கு தெரியும். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், சோயா பொருட்கள், பீச், வேர்க்கடலை மற்றும் சில மருந்துகள் தைராய்டு ஹார்மோன் தொகுப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் பலர் கேள்விப்பட்டிருப்போம். உடலில் வளர்சிதை மாற்ற விகிதம், இதய செயல்பாடுகள், செரிமான செயல்பாடுகள், தசை ஆரோக்கியம், மூளை வளர்ச்சி, எலும்பு ஆரோக்கியம் போன்றவை தைராய்டு ஹார்மோன் பாதிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகள் ஆகும். கழுத்தின் முன்புறத்தில் அமைந்துள்ள தைராய்டு சுரப்பி, உடலில் தைராய்டு ஹார்மோன்களின் முக்கிய ஆதாரமாக திகழ்கிறது. 


தைராய்டு என்றால் என்ன?


தைராய்டு என்பது நமது கழுத்தின் முன்புறத்தில் உள்ள ஒரு சிறிய, வண்ணத்துப்பூச்சி வடிவ சுரப்பி ஆகும், இது நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல், திசுக்கள் மற்றும் உறுப்புகளை பாதிக்கும் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது, எனவே உடல் சரியாக வேலை செய்ய உதவுவதில் பெரும் பங்கு வகிக்கிறது. ஆனால் இப்பொதெல்லாம் தைராய்டின் வேலை இன்னும் அதிகமாகி உள்ளது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கு பின்னால் கூட தைராய்டு இருப்பதாக கூறுகிறார்கள். தினசரி உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான எடையை பராமரிப்பது தைராய்டு ஆரோக்கியத்தில் நன்மை பயக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர், எனவே, நிறைய புதிய காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், மெலிந்த புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் எடுத்துக்கொள்வதுடன், 7-9 மணிநேரம் தூக்கம் அவசியம். 



உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும்


நவி மும்பையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த மருத்துவ உணவியல் நிபுணர் டாக்டர் வர்ஷா கோரே ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “ஹைப்பர் தைராய்டிசம் உள்ள நோயாளிகளுக்கு அதற்கென குறிப்பிட்ட உணவுகள் எதுவும் தேவையில்லை, இருப்பினும் தேவையான அளவு மற்றும் ஆரோக்கியத்துடன் சாப்பிடுங்கள். ஊட்டச்சத்துக்கள் நிச்சயமாக சிறந்த தைராய்டு நிர்வாகத்திற்கு உதவும். உணவுகளைப் பற்றி பேசுகையில், உணவில் உள்ள அயோடின் உள்ளடக்கம் போதுமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும், அயோடின் உப்பு மூலம் கிடைக்கும் மிகவும் பொதுவான ஆதாரம் ஆகும், எனவே தேவையான அளவு உப்பு எடுத்துக்கொள்வது சிறந்தது", என்று கூறுகிறார்.


தொடர்புடைய செய்திகள்: Video: திமுக தொண்டர் மீது கல்லைத் தூக்கி வீசிய அமைச்சர் நாசர்.. குவியும் கண்டனங்கள்.. விமர்சனங்களை பெறும் வீடியோ..


ஒமேகா 3 அவசியம்


மேலும் மைதா, மாவுச்சத்துள்ள உணவுகள், இனிப்புகள் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள் எடை அதிகரிப்பதற்கும், ஹைப்பர் தைராய்டிசம் உள்ள நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார். அதனுடன், உணவில் துத்தநாகம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருப்பதையும் அவர்கள் உறுதி செய்ய வேண்டும், எந்த வகையான குறைபாட்டையும் தீர்க்க கூடுதல் உடல் செயல்பாடுகளுடன் இணைந்திருப்பது அவசியம் என்று கூறினார்.



ஊட்டச்சத்து நிபுணர் கருத்து


KDAH இன் ஆலோசகர், உணவுமுறை மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் பிரதிக்ஷா கடம் கருத்துப்படி, ஹைப்போ தைராய்டு நோயால் பாதிக்கப்படுபவர்கள் சோயாபீன், வேர்க்கடலை, பேரிக்காய், பீச், ஸ்ட்ராபெர்ரி, கீரை, உருளைக்கிழங்கு, ப்ரோக்கோலி, பிரஸ்ஸல்ஸ் ஸ்போரட்ஸ், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், முள்ளங்கி போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறார். அவர், "இது தவிர, முட்டையின் மஞ்சள் கரு, கருவாடு, ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் நிலக்கடலை ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் பாதுகாக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். அஜினோமோட்டோ, பேக்கிங் பவுடர் மற்றும் சோடா பை கார்பனேட் நிறைந்த உணவுகளும் ஹைப்போ தைராய்டிசம் உள்ளவர்களுக்கு நல்லதல்ல. ஹைப்பர் தைராய்டிசத்திற்கு, உணவுமுறைகளில் அத்தகைய கட்டுப்பாடு இல்லை, ஆனால் உணவை மிதமாக உட்கொள்ள வேண்டியது அவசியம்", என்றார்.