தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரும், தமிழ்நாட்டின் பால்வளத்துறை அமைச்சருமாகியவர் நாசர். தி.மு.க.வின் சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் நாளை அனுசரிக்கப்பட உள்ளது. பல்வேறு மாவட்டங்களிலும் தி.மு.க. சார்பில் வீரவணக்க நாள் அனுசரிப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் அருகே உள்ள வேடங்கிநல்லூரில் நாளை மொழிப்போர் தியாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஏற்பாட்டை பார்வையிடுவதற்காக அமைச்சர் நாசர் இன்று நேரில் சென்றார்.


கல்லை வீசிய அமைச்சர்:


விழாவிற்கான ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்ட அமைச்சர் நாசர், அங்கே இருந்த கட்சித் தொண்டர்களிடம் அமர்வதற்கு நாற்காலி எடுத்து வரச் சொன்னார். ஆனால், நாற்காலியை எடுத்து வரச்சென்ற தொண்டர்கள் நாற்காலியை எடுத்து வர தாமதமாகியுள்ளது. இதனால், காத்திருந்த அமைச்சர் நாசர் கோபம் அடைந்தார்.






கோபத்தின் உச்சிக்கே சென்ற நாசர் தான் ஒரு அமைச்சர் என்பதையும் மறந்து, அங்கே கீழே கடந்த கல்லைத் தூக்கி தொண்டர் ஒருவர் மீது வீசினார். அவரைச் சுற்றி தி.மு.க. தொண்டர்களும், அமைச்சரின் பாதுகாப்பிற்காக வந்த காவல்துறையினரும் இருந்தனர். மேலும், கல்லைத் தூக்கி வீசிய அமைச்சர் நாசர் அந்த தொண்டரிடம், “ போய் சேர் எடுத்துட்டு வா போ.. ஒரு சேர் எடுத்துட்டு வா… யார்ட.. போடா..” என்று கூறுகிறார்.


நாளை திருவள்ளூரில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான விழா ஏற்பாட்டை கண்காணிக்கச் சென்ற அமைச்சர் நாசர் பொதுவெளியில், தான் ஒரு அமைச்சர் பதவியில் இருக்கிறோம் என்பதையும் மறந்து தொண்டர் மீது கல்லைத் தூக்கி வீசியெறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அங்கே நின்றவர்கள் சிலர்  வீடியோவாக எடுத்துள்ளனர்.


குவியும் கண்டனங்கள்:


இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் காரணமாக அமைச்சர் நாசருக்கு சமூக வலைதளங்களில் நாசருக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பால்வளத்துறை அமைச்சர் நாசர் கடந்த 2016ம் ஆண்டு  ஆவடி தொகுதியில் போட்டியிட்டு மாஃபா. பாண்டியராஜனிடம் தோல்வியைத் தழுவினார்.




பின்னர், கடந்தாண்டு 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ஆவடி தொகுதியில் வெற்றி பெற்றார். அமைச்சர் நாசர் தற்போது திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களுக்கு தொகுதியில் உள்ள பாதாள சாக்கடை ஒன்றை சாலையில் படுத்து ஆய்வு செய்ததற்காக மக்களின் பாராட்டுக்களை பெற்ற அமைச்சர் நாசர், தற்போது தொண்டர் மீது கல்லைத் தூக்கி வீசியதற்காக விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க: Erode East By Election: ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி..! விரைவில் வேட்பாளர் அறிவிப்பு - ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்


மேலும் படிக்க: திராவிட மாடல் ஆட்சி என்பது தாத்தா, மகன், பேரன், கொள்ளு பேரன் என குடும்ப ஆட்சி - முன்னாள் அமைச்சர் பேச்சு