தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் - 35
பூண்டு - 10 பற்கள்
எண்ணெய் - 3 ஸ்பூன்
தக்காளி -1
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 1 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
வெல்லம் - சிறிய துண்டு
தேங்காய் பால் - 1 கப்
கடுகு - 1 ஸ்பூன்
வெந்தயம் - அரை ஸ்பூன்
செய்முறை
அடுப்பில் ஒரு கடாய் வைத்து சூடானதும் அதில் 3 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். ஒரு ஸ்பூன் கடுகு அரை ஸ்பூன் வெந்தயம் சேர்க்கவும்.
கடுகு பொரிந்ததும் 30 லிருந்து 35 சின்ன வெங்காயம் 10 பூண்டு பற்கள் சேர்க்கவும். வதங்கி கொண்டு இருக்கும் போதே ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்க்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கி கண்ணாடிப் பதம் வந்ததும் ஒரு தக்காளியை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து இதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.
தக்காளி பாதி வதங்கியதும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள், ஒரு டீஸ்பூன் தனியா தூள், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் சீரகத்தூள், ஒரு டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த் தூள் சேர்த்து கிளறவும்.
இதற்கிடையே ஒரு பெரிய எலுமிச்சைப் பழ அளவிலான புளியை ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது கிரேவியில் தேவையான அளவு உப்பு சேர்த்து, அரை கப் அளவு புளி கரைசலை சேர்க்கவும். மேலும் இதில் ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்.
இதை சற்று கெட்டிப்பதம் வரும் வரையில் கொதிக்க விடவும்.
இதற்கிடையே அரை மூடி தேங்காயை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கப்புக்கும் மிகாது தண்ணீரை சேர்த்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும். கிரேவி சற்று கெட்டிப் பதம் வந்ததும் இந்த தேங்காய் பாலை சேர்க்கவும்.
கிரேவி கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும், பொடித்த ஒரு ஸ்பூன் மிளகு பொடியை சேர்க்க வேண்டும். இதனுடன் சிறிய வெல்லத்துண்டு சேர்க்கவும். இதை 30 நொடிகள் மட்டும் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான சின்ன வெங்காய கார குழம்பு தயார்.
மேலும் படிக்க
வெண்டைக்காய்- வேர்க்கடலை துவையல்... சாதத்துடன் வைத்து சாப்பிட சூப்பர் காம்போ!